Site icon Holy Temples

அருள்மிகு நெய்நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் இறைவன் சொக்கலிங்கேஸ்வரர் என்கின்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். இது ஒரு சிவன் கோயிலாக இருப்பிடினும் இக்கோயில் நந்தியின் பெயராலேயே பரவலாக அழைக்கப்படுகிறது. இந்த நந்தி தஞ்சை பெரிய கோயில் நந்தியின் தம்பியாகக் கருதப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த அன்பர் நந்தீஸ்வரரை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். நந்தியை இங்கிருந்த தீர்த்தக் குளத்திற்குள் வைத்து விட்டார். ஒரு சமயம் அவருக்கு கடுமையான வயிற்று வலி உண்டானது. தனக்கு நோய் குணமாக சிவனை வழிபட்டார். ஒருநாள் அவரை மாடுகள் விரட்டுவது போல கனவு கண்டார். தன் தவறை உணர்ந்த பக்தர்  தனக்கு நோய் குணமானால் நந்தியை பிரதிஷ்டை செய்து நெய் அபிஷேகம் செய்வதாகவும், கோயிலையும் பெரியளவில் திருப்பணி செய்வதாகவும் வேண்டிக் கொண்டார். சில நாட்களிலேயே நோய் குணமானது. எனவே, நந்தியை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். நந்திக்கும் நெய்யபிஷேகம் செய்து வழிபட்டார். இதன்பிறகு, நந்திக்கு பிரதானமாக நெய் அபிஷேகம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. அதனாலேயே இந்த நந்தி நெய் நந்திஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் ரிஷப ராசிக்காரர்களுக்கான பரிகாரத் தலமாக திகழ்கிறது.  நந்தீஸ்வரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. இதை வேறு எங்கும் காண இயலாது. நந்தீஸ்வரரின் மேல் பூசிய நெய்யில் ஈக்களோ, எறும்புகளோ உட்காருவதில்லை. இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இதுவே இக்கோயிலின் சிறப்பாகும். 

பலன்கள்:

வறுமை நீங்கி செல்வம் உண்டாகவும், நினைத்த காரியம் கைகூடவும் இங்குள்ள நந்தீஸ்வரரிடம் பிரார்த்தனை செய்யலாம் என்பது நம்பிக்கை.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியிலிருந்து 7 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. பொன்னமராவதி, திருபத்துர் மற்றும் புதுக்கோட்டையிலிருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

புதுகோட்டையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். பொன்னமராவதியிலும் தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு நெய்நந்தீஸ்வரர் திருக்கோயில், வேந்தன்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் – 622 419.

தொலைபேசி: 

95858 50663

இந்த பதிவை பகிர:
Exit mobile version