Site icon Holy Temples

அருள்மிகு இராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

இறைவன்: இராமநாதர்    
இறைவி: சரிவார்குழலி, சூளிகாம்பாள் 
தீர்த்தம்: இராம தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 77 வது ஆலயம்.  இராமன் வழிபட்டதால் இது ராமநந்தீஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. ராமர் இத்தலத்திற்கு வந்தபோது நந்தி தடுத்ததாகவும், அம்பாள் கருணை கொண்டு நந்தியை தடுத்து, ராமருக்கு காட்சி தந்ததாகவும் பின்பு ராமர் தீர்த்தத்தில் நீராடி ஈசனை வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் இராம நந்தீசுவரம் என்பது மருவி இராமநதீஸ்வரம் ஆயிற்று என்போரும் உண்டு.

         இலங்கையில் ராமன் இராவணனைக் கொன்ற கொலைப்பாவம் அதாவது பிரம்மஹஸ்தி தோசம் நீங்க இங்கு எழுந்தருளியுள்ள இறைவனை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இதற்குச் சான்றாக இத்தலத்திற்குரிய சோமாஸ்கந்த மூர்த்தத்தில் அம்பிகை இழுத்தநிலையில் நந்திதேவர் உள்ளார். மூலவர் பெரிய திருவுருவம். உயரமான பெரிய சுற்றுடைய ஆவுடையாருடன் கூடிய உயர்ந்த பாணம். சுவாமியின் விமானம் வேசர அமைப்புடையது. கல்வெட்டில் சுவாமியின் பெயர் இராமனதீச்சர முடையார் என்று காணப்படுகிறது.

          குலோத்துங்கன் இக்கோயிற் பூசைக்காக சிவபாதசேகர மங்கலம் என்னும் பெயருடைய நிலப்பகுதியை தானமாக அளித்த செய்தியும் கல்வெட்டு வாயிலாக தெரியவருகிறது.

தேவாரம்:   

சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப்
பொங்கர வாடலோன் புவனியோங்க
எங்கும னிராமன தீச்சரமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் உள்ள சன்னாநல்லூரிலிருந்து 8.கி.மீ.  தொலைவில்  இக்கோயில்  உள்ளது.  திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 8.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  இராமநாதர் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்  மாவட்டம் 609704.

தொலைபேசி:

கந்தஸ்வாமி  குருக்கள்:  9443113025, 9843227744,  04366-292300

ராமன் குருக்கள்:  04366-237176

இந்த பதிவை பகிர:
Exit mobile version