Site icon Holy Temples

அருள்மிகு வைகுண்டவாசர் கோயில், மாங்காடு

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் பெருமாள் வைகுண்டவாசர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். கைலாயத்தில் ஒருசமயம் அம்பிகை சிவனின் கண்களை விளையாட்டாக மூடவே, உலகம் இருளில் மூழ்கியது. அம்பிகை மீது கோபம்கொண்ட சிவன் அவளை பூலோகத்தில் பிறக்கும்படி சாபம் கொடுத்துவிட்டார். பூலோகம் வந்த அம்பிகை மானிடப்பெண்ணாக பிறந்தாள். இருப்பினும் சிவன் மீது கொண்ட பக்தியால் தன்னைத் திருமணம் செய்யக்கோரி கடுந்தவம் செய்தாள். தங்கையை தாரை வார்த்துக் கொடுக்க வைகுண்டத் திலிருந்து மகாவிஷ்ணுவும் பூலோகம் வந்தார். அச்சமயத்தில் அசுரகுருவான சுக்கிராச்சாரியாரும் சிவனை வேண்டி தவம் புரிந்தார். தனது குடும்பத்தை விட பக்தனுக்கே முதலிடம் தந்த சிவன் சுக்ராச்சாரியாருக்கு முதலில் காட்சி தந்தார். அம்பிகையை காஞ்சியில் மணம் புரிந்து கொள்வதாக உறுதியளித்தார். அம்பிகையும் அவர் சொற்படி காஞ்சிபுரம் சென்று தவத்தை தொடர்ந்தாள். பூலோகம் வந்த மகாவிஷ்ணு மாங்காட்டில் தங்கையைக் காணாமல் தவித்த வேளையில் மார்க்கண்டேய மகரிஷி அவரைக் கண்டு நடந்த கதையைக் கூறினார். புண்ணியத்தலமான மாங்காட்டில் வைகுண்டவாசர் என்ற பெயரில் தங்கும்படியும் கேட்டுக் கொண்டார். பெருமாளும் இத்தலத்தில் எழுந்தருளினார். வைகுண்டவாசர் என்று பெயர் பெற்றதால் இத்தலத்தையே வைகுண்டமாக கருதி இத்தலத்திற்கு  சொர்க்கவாசல் கிடையாது. 

 

பலன்கள்:

இந்த பெருமாளிடம் வேண்டினால் பணப்பிரச்னையால் தடங்கலாகும் திருமணங்கள் தடையின்றி நடக்கும் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

சென்னை மாங்காடு காமாட்சியம்மன் கோயிலுக்கு அருகிலேயே இத்தலம் உள்ளது. 

மாங்காடுக்கு சென்னையின் அநேக இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு வைகுண்டவாசர் திருக்கோயில் மாங்காடு, சென்னை – 602 101.

தொலைபேசி: 

044 26272053, 26495883

இந்த பதிவை பகிர:
Exit mobile version