Site icon Holy Temples

அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் உள்ள இறைவன் வன்னியப்பர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒருமுறை சப்தரிஷிகள் யாகம் செய்து கொண்டிருந்தனர். அவர்களது யாக குண்டத்தில் எரிந்த நெருப்பு சரிவர எரியவில்லை. இதனால் அக்னி பகவானை ஒளியிழந்து போகுமாறு அந்த ரிஷிகள் சபித்தனர். தனது கடமையை சரிவர செய்யாமல், சாபத்திற்கு ஆளான அக்னி பகவான், மீண்டும் தனது பழைய நிலையை பெற சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபட்டார். சிவபெருமான் அவருக்கு காட்சியளித்து மீண்டும் ஒளி தந்தார். அக்னி பகவான் வழிபட்ட தலமே இதுவாகும். வன்னி என்றால் அக்னி, அக்னிபகவான் வழிபட்ட ஈசன் என்பதால், இறைவன் வன்னியப்பர், வன்னீஸ்வரர், அக்னீஸ்வரர் என்ற திருநாமங்களால் அழைக்கபடுகிறார். மற்ற கோயில்களைப்போல இங்கு நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால் சுவாமி சன்னதியின்   முன் மண்டபத்தில் நவக்கிரக யந்திரம் புடைப்புச்சிற்பமாக  இருக்கிறது. இதுவே இக்கோயிலின் சிறப்பாகும். கோயிலுக்கு வெளியே சற்று தூரத்திலுள்ள அக்னி தீர்த்தத்தின் நீர், தீர்த்தத்திற்குள் உள்ள சிவலிங்க மண்டபத்தை மூழ்கடித்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை. 

 

பலன்கள்:

இக்கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள மண்டப தூணில் கர்ப்பமான நிலையில் ஒரு அம்பிகை காட்சி தருகிறாள். அவளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் சுகப்பிரசவம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

பாபனாசத்திலிருந்து தென்காசி செல்லும் சாலையில் 11 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி ஆகிய ஊர்களில் இருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

அருகிலுள்ள திருநெல்வேலியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். திருநெல்வேலியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 மணி முதல் மதியம் 10.00 மணி வரை

மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு வன்னியப்பர் திருக்கோயில், ஆழ்வார்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம் – 627412.

தொலைபேசி: 

04634-283 058

இந்த பதிவை பகிர:
Exit mobile version