Site icon Holy Temples

அருள்மிகு அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்

இறைவன்: அக்னிபுரீஸ்வரர் 
இறைவி: கருந்தார் குழலி அம்மன் 
தீர்த்தம்: அக்னி தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 75 வது ஆலயம்.  புன்னாகவனம், சரண்யபுரம், ரத்தனாரண்யம் என்பன புராணங்களில் வழங்கும் மறுபெயர்கள். இத்தலத்தின் திருக்கோயில் நாற்புறமும் அகழி சூழ நடுவில் இருக்கிறது. அக்னி பகவான் பூசித்துப் பேறுபெற்ற தலம். திருநாவுக்கரசர் முக்தி பெற்ற தலம். இன்றும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. . திருப்புகலூர் முருக நாயனார் அவதாரத்தலம். இவரது திருமடம், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலான நாயன்மார்கள் இவருடன் தொண்டர்குழாமாக இருந்து மகிழ்ந்த மடம்.சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் செங்கல்லைப் பொன்னாக்கிய திருத்தலம். மேகங்கள் பூசித்த தலம்.                   அக்னி பகவான் 7 சுடர்கள் 5 கரங்கள் 3 கால்கள் உடைய உருவமாக இறைவனை வழிபடுகிறார் அக்னிபகவானுக்கு அருள்செய்ததால் அக்னிபுரீஸ்வரர் என்றுபெயர்வந்தது. காலஸம்ஹரமூர்த்தி தனிசன்னதியில் அருள்புரிகிறார். அம்மன் தானே ஒரு பொண்ணுக்கு பிரசவம் பார்த்து குளிகாம்பாள் என்று பெயர் பெற்று காணி (நிலம்) பெற்றார் என்பது வரலாறு.  இங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு  பாணதீர்த்தம் என்றும் ஒரு பெயருண்டு. நளன் இந்த தீர்த்தத்தில் மூழ்கி எழுந்ததும் நான் திருநள்ளாறில் விலகி கொள்கிறேன் என்று சனிபகவான் அசரீரியாக கூறுகிறார். சனீஸ்வரபாகனுக்கும் நளனுக்கும் ஒரே சன்னதி . முடிகொண்டான்ஆறு, கோயிலுக்குத் தென்பக்கத்தில் ஓடுகிறது. புன்னை. `புன்னைப் பொழிற்புகலூர்`, `புன்நாகம் மணங் கமழும் பூம்புகலூர்` என்ற திருமுறைகள் இதற்கு மேற்கோள். வேளாக்குறிச்சி ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது. வர்த்த மானீச்சரம் இக்கோயிலுக்குள் உள்ளது.

தேவாரம்:   

செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளும்
கையர் கனைகழல் கட்டிய காலினர்
மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும்
பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

நன்னிலம் நாகப்பட்டினம் சாலையில் 10.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. நன்னிலத்திலிருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5.30 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்,  திருக்கண்ணபுரம் வழி, நாகப்பட்டினம் மாவட்டம் 609704.

தொலைபேசி:

9443113025, 04366 – 236119,  292300

இந்த பதிவை பகிர:
Exit mobile version