Site icon Holy Temples

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில், தாண்டிக்குடி

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் முருகன் பாலமுருகனாக அருள்புரிகிறார். கயிலாயத்திலிருந்து கோபித்துக் கொண்டு பழனி வருவதற்கு முன் முருகன் தாண்டிக்குடி வருகிறார். முருகன் இங்கிருக்கும் போதுதான் அகஸ்தியரின் சீடரனான இடும்பன் கயிலாயத்திலிருந்து சிவகிரி, சக்திகிரி என இரண்டு மலைகளை சுமந்து கொண்டு பழநி வந்து சேருகிறார். இதை அறிந்த முருகன் இந்த இரண்டு மலைகளில் ஒன்று தனக்கு இருப்பிடமாக்கிக் கொள்ள ஏற்றது என கருதி தாண்டிக்குதிக்கிறார். இதன் காரணமாகவே இந்த இடம் தாண்டிக்குதி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி தாண்டிக்குடி என ஆனது. பழனிக்கே முருகன் இங்கிருந்து தான் சென்றவர் என்பதால் எனவே பழனிக்கு செல்பவர்கள் இங்குள்ள தாண்டிக்குடி பாலமுருகனை தரிசித்த பின் சென்றால்தான் முழுமையான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இக்கோயில் தீர்த்தமாக அங்குள்ள பாறையிலேயே சிறு பள்ளத்தில் என்றுமே வற்றாத தீர்த்தம் வருகிறது. இக்கோயிலில் இருந்து 75 அடி தூரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. இந்த மண்ணே இக்கோயிலின் திருமண்ணாக வாய்த்திருக்கிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு இத்திருமண்ணே விபூதி பிரசாதமாக அளிக்கப்படுகிறது. 

 

பலன்கள்:

முருகப் பெருமானின் பரிபூரண அருளை இத்தலத்தில் வேண்டிக் கிடைக்கப் பெறலாம்.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

வத்தலகுண்டு கொடைக்கானல் சாலையில் ஊத்து என்னும் ஊரிலிருந்து பிரிந்து செல்லும் சாலையில் சென்று பண்ணைக்காடு வழியாக தாண்டிக்குடி செல்லலாம். வத்தலகுண்டுவிலிருந்து 46 KM தொலைவில் உள்ளது. வத்தலகுண்டு மற்றும் கொடைக்கானலில் இருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

வத்தலகுண்டுவில் தங்கி அங்கிருந்து செல்லலாம். வத்தலகுண்டுவில் தங்கும் விடுதிகள் உள்ளன.

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி: 

அருள்மிகு பாலமுருகன் திருக்கோயில் தாண்டிக்குடி, திண்டுக்கல் மாவட்டம் – 624 216.

 

தொலைபேசி: 

04542- 266 378, 99626 71467

இந்த பதிவை பகிர:
Exit mobile version