Site icon Holy Temples

அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி கோயில், நெமிலி

கோயிலின் சிறப்புகள்:

     இத்தலத்தில் உலகாளும் அம்மையான லலிதாம்பிகையின் மகளான பாலா திரிபுரசுந்தரி அருள்புரிகிறாள். முன்னொரு காலத்தில் பண்டாசுரன் என்னும் அசுரன் லலிதாம்பிகையோடு போரிட்டு தோற்றான். அவனுக்கு முப்பது புத்திரர்கள் இருந்தனர். அவர்களையும் அழித்தால் தான் தேவர்களுக்கு நிம்மதி என்பதால் லலிதாவின் மகளான ஒன்பது வயது பாலா புறப்பட்டாள். லலிதாம்பிகை தன் கவசத்தில் இருந்து சிறுகவசத்தை தோற்றுவித்து மகளின் உடலில் அணிவித்தாள். தேரேறிப் புறப்பட்ட பாலா பண்டாசுரனின் புத்திரர்களைத் தோற்கடித்தாள். பின்னர் அன்னை லலிதாம்பிகையுடன் மகள் ஐக்கியமானாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பாலா ஒரு சமயம் நெமிலியில் வசித்த வேதவித்தகர் சுப்பிரமண்ய அய்யர்  கனவில் தோன்றினாள். தான் ஆற்றில் வரப் போவதாகவும் தன்னை அழைத்து வீட்டில் வைத்துக் கொள்ளும்படியும் கூறினாள். அய்யர் ஆற்றுக்குச் சென்று இடுப்பளவு நீரில் இறங்கி சிலையைத் தேடினார்.  இரண்டு நாட்களாக தேடி கிடைக்காமல் போக மூன்றாம் நாள் பாலா அய்யர் கையில் கிடைத்தாள். அந்தச் சிலை சுண்டுவிரல் அளவே இருந்தது. அய்யர்  தன் வீட்டிலேயே பாலாவை பிரதிஷ்டை செய்தார். அந்த வீடே கோயிலானது. பின்னாளில் அதுவே பாலா பீடம் என்று அழைக்கப்படுகிறது. கருவூர்சித்தரின் பாடல்களில் பாலாவைப் பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது. கருவூர் சித்தர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் பாலாவின் சந்நிதியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம்.  குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

 

பலன்கள்:

மாணவர்கள் இங்கு வழிபடுவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபகசக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

அரக்கோனதிலிருந்து காவேரிபாக்கம் செல்லும் சாலையில் அரக்கோனதிலிருந்து 15 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. அரக்கோனதிலிருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

அருகிலுள்ள அரக்கோணத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். அரக்கோணத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை திறந்திருக்கும். 

கோயில் முகவரி: 

அருள்மிகு பாலா திரிபுரசுந்தரி திருக்கோயில் நெமிலி, அரக்கோணம், வேலூர் மாவட்டம்.

தொலைபேசி: 

04177- 247216, 99941 18044.

இந்த பதிவை பகிர:
Exit mobile version