Site icon Holy Temples

அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருமருகல்

இறைவன்: மாணிக்கவண்ணர் 
இறைவி: வண்டுவார்குழலி 
தீர்த்தம்: மாணிக்க தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 80 வது ஆலயம்.  மருகல் என்பது ஒருவகை வாழை. இது கல்வாழையெனவும் வழங்குகின்றது. கருங்கல் தளத்திலேயே வளர்வதால் இப்பெயர் வந்தது என்கின்றார்கள். அதன் பழத்தை இறைவனுக்கு நிவேதிக்கலாமேயன்றி மக்கள் உண்ணல் ஆகாது; உண்டால் வயிற்று நோயுண்டாகும் என்பது அவ்வூர்மக்கள் வாய்மொழி. ஆனால் எப்போதும் காய் இருக்குமாம். இந்த வாழை தலவிருட்சமாதலின் இத்தலத்திற்கு இப்பெயர் வந்தது.

         கோச்செங்கட் சோழநாயனார் எழுப்பிய எழுபது மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. யானையேறாப் பெருங்கோயில். பாண்டியநாட்டு வணிகனாகிய தாமன் என்பவன் தன் மக்கள் எழுவரில் ஒருத்தியைத் தன்மருமகனுக்குக் கொடுப்பதாக வாக்களித்தான். அவர்களுக்குப் பருவம் வந்தகாலத்து ஒவ்வொருத்தியாகப் பிறருக்கு மணம் செய்துகொடுத்தான். அதனை உணர்ந்த ஏழாமவள் தாய்தந்தையர் அறியாமல் தன் நன்மாமனோடு உடன்போக்கு நிகழ்த்தினாள், திருமருகலையடைந்து ஒரு திருமடத்தில் இராத்தங்கினாள், அன்றிரவு அந்தச் செட்டி குமரனை வினைவயத்தால் பாம்பு தீண்டியது. அவன் இறந்தான். அவள் இறைவனைநோக்கி முறையிட்டுப் புலம்பினாள். சுவாமி தரிசனத்திற்காகவந்த திருஞானசம்பந்த சுவாமிகள் திரு உள்ளத்தை இவள் அழுகை ஒலி அருள்சுரக்கச் செய்தது. சுவாமிகள் திருப்பதிகம் பாடி அவனை எழுப்பினார். தம் திருமுன்பே அவர்களுக்குத் திருமணம் முடிப்பித்தார் என்பது இத் தலத்தைப்பற்றிய சிறந்த நிகழ்ச்சி. 

தேவாரம்:   

சடையா யெனுமால் சரண்நீ யெனுமால்
விடையா யெனுமால் வெருவா விழுமால்
மடையார் குவளை மலரும் மருகல்
உடையாய் தகுமோ இவள்உண் மெலிவே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

திருவாரூரிலிருந்து  20.கி.மீ.  தொலைவில்  இக்கோயில்  உள்ளது.  திருவாரூரிலிருந்து  பேருந்துகள்  உள்ளன. 

தங்கும் வசதி:

திருவாரூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 9.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  மாணிக்கவண்ணர் திருக்கோயில், திருமருகல், நாகப்பட்டினம்  மாவட்டம் 609702.

தொலைபேசி:

ஐய்யாசாமி  குருக்கள் – 9791400720, 04366 – 270823

இந்த பதிவை பகிர:
Exit mobile version