Site icon Holy Temples

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி

இறைவன்:
வேதராஜன்
இறைவி:
அமிர்தவல்லி நாச்சியார்
தீர்த்தம்:
இலாட்ச புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்:
திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார்
 

கோயிலின் சிறப்புகள்:

     மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 34 வது திருத்தலம். திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கோயில். உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும். இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. திருசுற்றில் வலப்புறம் ஆண்டாள் சன்னதியும், இடப்புறம் தாயார் சன்னதியும் உள்ளது. திருச்சுற்றில் பின்புறம் யோக நரசிம்மப் பெருமாள் உள்ளார். திருமங்கை ஆழ்வார் அவதரித்த தலம் . இவர் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் தனிசன்னதியில் அருள் தருகின்றார் ;ஆழ்வார் பல அற்புதங்கள் செய்ததால் ஆழ்வார் கோயில் என்றும் அறியப்படுகிறது, இங்கிருந்து 1 கீ.மீ தூரத்தில் உள்ள வேதராஜபுரம் என்ற இடத்தில்தான் திருமங்கைமன்னன் பெருமாளை வழிப்பறிசெய்தார். இவரை தடுத்தாட்கொண்ட பெருமாள் இவருக்கு திருமந்திரஉபதேசம் செய்தார். இதை உணர்த்தும் வண்ணம் இன்றும் இங்கு வேடு பறி உற்சவம் நடக்கிறது.. பெருமாள் கல்யாண திருக்கோலத்தில் இளம் தம்பதிகளாக காட்சி அளித்தார். இதனால் கல்யாண ரெங்க நாதர் என்று பெயர் வந்தது. ஆண்டு தோறும், தை மாதம் .பௌர்ணமி அன்று திருமங்கை ஆழ்வார் மங்கள சாசன உற்சவம் சிறப்பாக நடைகிறது. அவ்வமயம் திருமங்கை ஆழ்வாரின் உற்சவ சிலையைப் பல்லக்கில் ஏற்றி திருமணிமாடம் முதல் திருநகரி வரை அழைத்துச் செல்லப்படுகிறார். கருட சேவை அன்று திருநகரி கோயிலின் சுற்றியுள்ள 11 திருநாங்கூர் கோயில்களிலிருந்து, கருட உற்சவர்களை, இக்கோயிலில் எழுந்தருளச் செய்வதுடன், திருமங்கை ஆழ்வாரையும், அவர்தம் இணையரான குமுதவள்ளியையும் அம்ச வாகனத்தில் எழுந்தருளச் செய்து, திருமங்கை ஆழ்வார் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைப் பாடுவர். இக்கோயில் தென்கலை வைணவ வழிபாட்டைப் பின்பற்றுகிறது.      இக்கோயிலை சோழர்கள் கட்டினார்கள் எனக் கருதப்படுகிறது. 16ஆம் நூற்றாண்டில் விஜய நகர பேரரசர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்கள் இக்கோயில் திருப்பணி மேற்கொண்டனர். குலசேகர ஆழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார் ஆகியவர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோயில் ஆகும். இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்த இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது. கோயில் கோபுரம் ஏழு நிலைகளுடன் 125 அடி உயரம் கொண்டது.

பிரபந்தம்:

கள்வன்கொல் யான்அறியேன்கரியானொரு காளைவந்து
     வள்ளிமருங்குல் என்தன் மடமானினைப் போதவென்று
வெள்ளிவளைக்கை பற்றப் பெற்ற தாயரை விட்டகன்று
     அள்ளலம்பூங்கழனி அணியாலிபுகுவர்கொலோ

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

இந்த கோயில் திருநாங்கூருக்கு அருகில், திருவாலியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. சீர்காழியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00  – 11.00 மற்றும் மாலை  5.00   – 9.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு வேதராஜன் திருக்கோயில், திருநகரி, மயிலாடுதுறை மாவட்டம் 609106.

தொலைபேசி:

04364 – 256927    9443372567

அருகில் உள்ள கோயில்கள்:

திருநாங்கூர், திருவாலி, தலைச்சங்காடு, திருவெண்காடு, பல்லவனீஸ்வரம் கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம்.
இந்த பதிவை பகிர:
Exit mobile version