Site icon Holy Temples

அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில், திருக்குறுக்கை

இறைவன்: வீரட்டேஸ்வரர்                      
இறைவி: ஞானாம்பிகை  
தீர்த்தம்: சூல தீர்த்தம், ஞான தீர்த்தம் 
பாடியோர்: அப்பர்    

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 26 வது ஆலயம். கடுக்காய்  மரம்  தல விருட்சமாதலின் கடுவனம் எனவும், இறைவர் அம்மையாரைப் பிரிந்து யோகஞ் செய்த இடமாதலின் யோகீசபுரம் எனவும், காமனைத் தகித்த இடமாதலின் காமதகனபுரம் எனவும், இலக்குமியினது நடுக்கத்தைப் போக்கியதால்  கம்பகரபுரம் எனவும், தீர்க்கவாகு முனிவர் இத்தலத்து வந்து இறைவனை அபிடேகித்தற்குக் கங்கா நீரினை விரும்பித் தமது கரங்களை நீட்டக் கரங்கள் நீளாது குறுகினமையால் குறுக்கை எனவும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. குறுக்கை என்பது  ஒருவகைத் தாவரம் பற்றிய காரணப்பெயர். 

         அட்டவீரட்டத் தலங்களுள் ஒன்று. இத் தலத்துச் சபை காமனங்கநாசனி சபை எனப் பெயர்பெறும். சம்பு விநோத சபை எனவும் வழங்கும். இறைவன் உமையம்மையாரைப் பிரிந்து யோகத்தமர்ந்த பெருமை மிக்கது. குறுங்கை விநாயகர் எழுந்தருளி அன்பர்கட்கு வேண்டும் பேறுகளைக் கொடுத்து அருள் பாலிப்பது சிறப்பு.

         கரும்பு வில்லினையுடைய காமனை எரித்து, பின்பு ரதியின் வேண்டுதலுக்கிணங்க மீண்டும்  உயிர் கொடுத்தருளியது,  இலக்குமியின்  நடுக்கத்தை நீக்கியது, அசுரர்களை வெற்றிகொள்வதற்காக முருகக் கடவுள் வந்து பூசித்துச் சூலாயுதம் பெற்றது, இராகவன் வழிபட்டுப் பிதிர்க் கடன் ஆற்றியது, தீர்க்கவாகு முனிவருக்குக் கரம் குறுகச் செய்தது, வாணாசுரனுக்கு அஞ்சிய மகாவிஷ்ணுவுக்கு அபயமளித்தது, திருமுடி கண்டேன் எனப் பொய் கூறிய பிரமனுக்கு இறைவன் படைப்புத் தொழிலை நீக்கப் பிரமன் அஞ்சி வழிபட்டுப் பூசித்து இழந்த படைப்புத்தொழிலை மீண்டும் பெற்றது, சோழநாடு முழுவதும் நெல் விளைய வேண்டுமென்று விரும்பிய சயத்துவசனுக்கு அவன் விருப்பின்படியே அருள் பாலித்தது, அகத்திய முனிவரால் பூசிக்கப் பெற்றது, காளியும் துர்க்கையும் காவல் புரிவது, இரதியும் காமனும் வழிபட்டது ஆகிய பல பெருமைகளையுடையது

         மன்மதனை எரித்த இடம் கோயிலுக்கு  அருகில்  தென்னைமர தோப்பில் விபூதி குட்டை  என்ற பெயருடன்  உள்ளதுகளிமண்களுக்கு நடுவே வெள்ளைநிறத்தில் மண் மாறியிருப்பதை இப்போதும் காணலாம். இது தருமை ஆதீன கோயிலாகும். 

         இந்த  ஊருக்கு  1 கீ.மீ. தொலைவில்  வரகடை  என்ற  கிராமம்  உள்ளதுஇங்கு உள்ள  சிவன் கோயில்  சுவற்றில்  வரகு  தானியத்தை  அடையாக  வைத்து கட்டப்பட்டு  இருந்தது. பெரிய பஞ்சம்    வந்த காலத்தில்  இந்த  தானியத்தை  எடுத்து பஞ்சம்  போக்கி  கொண்டனர் . வரகு  வீணாகாத  ஒரு தானியம். இந்த ஊரில்  பிரசித்தி  பெற்ற  அங்காள பரமேஸ்வரி ஆலயம்  உள்ளதுஜாதி  வித்தியாசம்  இல்லமால்  பல  ஆயிரக்கணக்கான குடும்பங்களின்  குல தெய்வ  கோயில். அதிசயமாக  சில  அய்யங்கார்  குடும்பங்களுக்கு  கூட  குல தெய்வமாக இந்த கோயில் திகழ்கின்றது.  எனது  முன்னோர்களால்  ஏற்படுத்தப்பட்ட  அறுபத்து மூவர்  குருபூஜை மடம்  இன்றும்  நால்வர்  குரு பூஜையை  சிறப்பாக  நடத்துகிறார்கள். 

தேவாரம்:   

ஆதியிற் பிரம னார்தா மர்ச்சித்தா ரடியி ணைக்கீழ்
ஓதிய வேத நாவ ருணருமா றுணர லுற்றார் சோதியுட்
சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக்
கோதிவண் டறையுஞ்சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

மயிலாடுதுறையில் இருந்து கிழாய் வழியாக மணல்மேடு செல்லும் வழியில் 9.கி.மீ.  தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  வீரட்டேஸ்வரர் திருக்கோயில், கொறுக்கை, நீடூர் வழி, மயிலாடுதுறை மாவட்டம் 609203.

தொலைபேசி:

04364 254824

இந்த பதிவை பகிர:
Exit mobile version