Site icon Holy Temples

அருள்மிகு இடும்பன் கோயில், பழனி

கோயிலின் சிறப்புகள்:

     பழனி மலையின் எதிரே உள்ள ஒரு குன்றில் இடும்பன் தனிக் கோயிலில் வீற்றிருந்து அருள்புரிகிறார். முருகனால் அழிக்கப்பட்ட சூரபத்மன், பானுகோபன், கஜமுகாசுரன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களுக்கு வில்லாசிரியனாகத் திகழ்ந்தவன் இந்த இடும்பன். இவர்கள் அழிக்கப்பட்ட பிறகு இடும்பன் காட்டில் சுற்றித் திரிந்தான். அப்போது ஒரு சமயம் அகத்தியரைக் கண்டான். முருகப்பெருமானின் கருணையைப் பெற விரும்புவதாகக் கூறினான். அசுரகுருவாயினும் அவனது உயர்ந்த  எண்ணத்தைப் புரிந்து கொண்ட அகத்தியர், கேதாரத்திலுள்ள சிவமலை, திமலை என்னும் மலைகளை சரவணபவ என்றும் அரோகரா என்றும் முழங்கியபடி பொதிகைக்கு கொண்டு வந்தால் முருகனின் தரிசனம் கிடைக்கும் என்று கூறினார். இடும்பனும் அவனது மனைவியான இடும்பியும் அங்கு சென்று அம்மலையைத் தூக்க சிவனை வேண்டி தவமிருந்தனர். அப்போது பிரம்மதண்டம் ஒன்று தோன்றியது. அஷ்ட திக்கு நாகங்களும் அங்கே வந்தன. அவற்றை பிரம்மதண்டத்தில் உறிபோல் கட்டி, மலைகளை அதில் வைத்து காவடியாகச் சுமந்தபடி பொதிகை வரும் வழியில்,  திருவாவினன்குடி என்ற இடத்தில் பாரம் அதிகமாகவே அங்கே இறக்கி வைத்தான். இளைப்பாறிய பிறகு மீண்டும் தூக்கவே அவனால் மலையை தூக்க முடியவில்லை. சிவமலையின் மீது ஒரு சிறுவன் ஏறி நின்றுவிளையாடிக் கொண்டிருந்தான். அவனது அழகைப் பார்த்ததுமே இடும்பன் அவனை ஒரு தெய்வப்பிறவி என்று நினைத்தான். மலையில் இருந்து இறங்கிவிடும்படி கூறினான். அந்தச்சிறுவன் கீழே இறங்க மறுத்து தன் கையில் இருந்த தண்டத்தால் இடும்பனை லேசாகத் தட்ட, அந்த அடியைத் தாங்க முடியாமல் இடும்பன் கீழே விழுந்து இறந்தான். அசுரர்களுக்கே வில்வித்தை கற்றுக்கொடுத்த தன் கணவனைக் கொல்லும் தகுதி, அசுரர்களை வென்ற அந்த முருகனைத் தவிர வேறு யாருக்கும் இருக்க முடியாது என உறுதியாக நம்பிய இடும்பி, சிறுவனின் காலில் விழுந்தாள். அச்சிறுவன் மயில் மேல் முருகனாக காட்சி தந்து இடும்பனை எழுப்பி, இடும்பனிடம் “இம்மலையின் இடையில் நீ நிற்க வேண்டும். பக்தர்கள் உன்போல் எனக்குரிய வழிபாட்டு பொருட்களை காவடியாக கொண்டு வர வேண்டும். உன்னை முதலில் வழிபட்டே என்னை வழிபட வேண்டும். உன்னை வணங்கியவர்கள் என்னை வணங்கிய பயனைப் பெறுவார்கள்” என்று கூறினார். பழனி மலை உருவாக காரணமாயிருந்த இந்த இடும்பனை வணங்கிய பின்பே முருகனை வணங்க வேண்டும் என்பதே இக்கோயிலின் சிறப்பாகும். 

பலன்கள்:

     குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இந்த இடும்பனை வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை. 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

     பழனி மலைக்கு அருகிலேயே இந்த இடும்பன் மலை உள்ளது. 

தங்கும் வசதி:

     பழனியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

கோயில் முகவரி: 

அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601.

தொலைபேசி: 

04545-242 236

இந்த பதிவை பகிர:
Exit mobile version