Site icon Holy Temples

அருள்மிகு கோடியம்மன் கோயில், தஞ்சாவூர்

கோயிலின் சிறப்புகள்:

     தஞ்சையின் எல்லையில் குடிகொண்டிருக்கும் இந்த அம்மன் தஞ்சையின் எல்லை தெய்வமாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். தற்போது கோயில் இருக்கும் பகுதி முன்னொரு காலத்தில் தேவர்கள் தவம் செய்த சோலைவனமாக இருந்தது. அங்கிருந்தபடியே அவர்கள் இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்களுக்கு இணையாக இறைவனை வழிபட்ட தஞ்சன் என்ற அசுரன் தேவர்களுக்கும் அதிகமான தகுதியைப் பெற்றான். தன்னுடைய சக்தியின் காரணமாக தேவர்களை துன்பம் செய்துவந்தான். தேவர்கள் ஒன்றுகூடி சிவனிடம் முறையிட்டனர். அவர் தனது அம்பிகையான ஆனந்தவல்லியிடம் தஞ்சனை அழிக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். ஆனந்தவல்லி பச்சைக்காளியாக வடிவெடுத்து அசுரனை அழிக்க வந்தாள். அசுரனோ, அழிய அழிய மீண்டும் தோன்றினான். இவ்வாறு கோடி அவதாரங்கள் எடுத்தான்.இதனால் கோபமடைந்த ஆனந்தவல்லியின் முகம் சிவந்தது. அவள் சாந்தத்தை கைவிட்டு பவளக்காளியாக மாறினாள். தஞ்சனை வதம் செய்தாள். தஞ்சனின் உடலிலிருந்து பெருகிய ரத்தம் ஆறாக ஓடியது. அந்த எதிரொளிப்பில் காளியின் உருவமே சிவப்பானது. கோடி அவதாரம் எடுத்த அசுரனை அழித்ததால் அம்பாள் கோடி அம்மன் என்றும் வழங்கப்பட்டாள். தஞ்சன் தான் இறக்கும் தருவாயில் தன் பெயரால் இந்த ஊர் அழைக்கப்பட வேண்டும் என்று வரம் பெற்றான். அதன்படியே தஞ்சபுரி என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி தஞ்சாவூர் என்றானது. சிவபெருமான் தன் தலையில் கங்கையை சூடியிருப்பது போல இந்த அம்மன் தன் தலையில் சிவபெருமானையே சூடியிருப்பது சிறப்பாகும். எனவே இக்கோயிலில் அம்மனுக்குரிய சிங்க வாகனத்திற்கு பதிலாக நந்தி வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் பூஜை நடக்கும்போது சற்று தொலைவில் உள்ள ஆனந்தவல்லி சமேத தஞ்சபுரீஸ்வரர் கோயிலிலும் பூஜை நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலன்கள்:

புத்திர பாக்கியம் கிட்ட மற்றும் செய்வினையில் இருந்து விடுபட இந்த அம்மனை வேண்டி பலனடையலாம். 

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

தஞ்சையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் தஞ்சையிலிருந்து 3 KM தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

தஞ்சையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன. 

 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை 

கோயில் முகவரி: 

அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில், தஞ்சாவூர்- 613001.

தொலைபேசி: 

93671 82045

இந்த பதிவை பகிர:
Exit mobile version