Site icon Holy Temples

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில், குரங்கணில்முட்டம்

இறைவன்: வாலீஸ்வரர்
இறைவி: இறையார் வளையம்மை
தீர்த்தம்: காக்கை தீர்த்தம்
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

     தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 6 வது ஆலயம். எமன் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசவே அக்கயிறு தவறுதலாக சிவன் மீது விழுந்தது. தன் பணியை சரியாக செய்யாததால் சிவன் அவரது பதவியை பறித்தார். தன் பதவியை இழந்த எமதர்மன் சிவனை வணங்கி அவரிடம் மன்னிப்பு கேட்டார். சிவபெருமானின் ஆணைக்கு இணங்க முட்டம் (காகம்) வடிவில் பல தலங்களுக்கும் யாத்திரை சென்று சிவனை வணங்கி வந்தார்.

      கவுதமரின் மனைவி மீது ஆசை கொண்டதால் தன் உடல் முழுவதும் கண்களாக தெரியும்படி முனிவரிடம் சாபம் பெற்றான் இந்திரன். அவன், தன் தவறை மன்னிக்கும்படி சிவனிடம் வேண்டினான். சிவன் அவனிடம், “தகுந்த காலத்தில் பூலோகத்தில் தான் சாபவிமோசனம் தருவதாகவும், அதுவரையில் பூமியில் சிவதலயாத்திரை மேற்கொள்ளும்படியும் கூறினார். இவ்விருவரும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்றாக இத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். அப்போது, சிவபக்தனான வாலி குரங்கு வடிவத்தில் இங்கு வந்து சிவனை வழிபட்டார். இதனைக்கண்ட எமன், இந்திரன் இருவரும் வாலியுடன் சேர்ந்து சிவனை வணங்கினர். சிவன் இம்மூவருக்கும் காட்சி தந்ததோடு எமன், இந்திரன் இருவருக்கும் சாபவிமோசனமும் கொடுத்தார். பின் அவர்களது வேண்டுதலுக்காக இவ்விடத்திலேயே, சுயம்புவாக எழுந்தருளினார். தலமும் “குரங்கு அணில் முட்டம்’ என்றானது. கோயில் முன்மண்டப சுவர்களில் இம்மூவரும் வழிபட்ட சிற்பங்கள் இருக்கிறது. இங்கு இறைவனுக்கு கொய்யாமலை என்ற பெயரும் உண்டு. ஆதலால் பலருக்கு இங்கு கொய்யாமலை என்ற பெயர் உள்ளது.

      இறைவி  கைகளில் வளையல் அணிந்து, மகிழ்ந்த முகத்துடன் காட்சி தருவது சிறப்பு. திருமணமான பெண்களும், கர்ப்பிணிகளும் இவளுக்கு வளையல்கள் போட்டு, பின்பு அதனை அணிந்து கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் விரைவில் புத்திரபாக்கியமும், சுகப்பிரசவமும் ஆகுமென நம்புகின்றனர்.

தேவாரம்:

இறையார் வளையாளையொர் பாகத் தடக்கிக்
     கறையார் மிடற்றான் கரி கீறிய கையான்
குறையார் மதி சூடி குரங்கணின் முட்டத்
     துறைவானெமை யாளுடை யொண் சுடரானே.

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி சாலையில் (8 கி.மீ.) தூசி  எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து சுமார் 2 கி.மீ., தூரம் சென்றால் கோயிலை அடையலாம். காஞ்சியிலிருந்து ஆட்டோ அல்லது காரில் செல்வது சிறந்தது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 7.00 – 9.00 மற்றும் மாலை 5.00 – 7.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோவில்,   குரங்கணில்முட்டம்,   தூசி அஞ்சல், செய்யாறு வட்டம், திருவண்ணாமலை   மாவட்டம் – 631703.

தொலைபேசி:

கே.எம்.ஸ்ரீதர் குருக்கள்,  044-2724 2409, 99432 95467

இந்த பதிவை பகிர:
Exit mobile version