இறைவன்: |
தேவாதிராஜன் |
இறைவி: |
செங்கமலவல்லி |
தீர்த்தம்: |
தர்சன புஷ்கரணி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 23வது திருத்தலம். சாளக்கிராமத்தில் அமைந்த 13 அடி உயர மூலவர் கொண்ட திருத்தலம். பார்வதி பசுகோலத்தில்உள்ளார் , திருமணத் தடை நீக்கும் திருத்தலமாகக் கூறப்படுகின்றது. பெருமாளும் சிவபெருமானும் சொக்கட்டான் ஆடிய போது பார்வதிதேவியை நடுவராக நியமித்ததில், காய் உருட்டும் போது சகோதரனான பெருமாளுக்கு சாதகமாகக் கூற, சிவபெருமான் பார்வதி தேவியைப் பசுவாக மாற சாபமிட, அவருக்கு துணையாக சரஸ்வதி தேவியும் லட்சுமி தேவியும் பசுவாகி பூமிக்கு வந்த போது மேய்ப்பவராக பெருமாள் ’ஆ’மருவியப்பன் எனும் பெயரில் வந்த திருத்தலம். வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது கோயிலின் வலப்புறம் கம்பர் சன்னதியில் கம்பரும் அவருடைய மனைவியும் உள்ளனர். கம்பர் பிறந்த ஊர். அடுத்து ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. அருகே பலிபீடம், கொடி மரம் உள்ளன. அடுத்துள்ள கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் வலது புறத்தில் தேசிகர் மடப்பள்ளி, ஆழ்வார் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. இடது புறம் ஆண்டாள் சன்னதி உள்ளது. சற்று உயர்ந்த தளத்தில் மூலவர் தேவாதிராஜன் நின்ற நிலையில் கிழக்கு நோக்கி உள்ளார். இடது புறம் கருடாழ்வாரும், வலப்புறம் பிரக்லாதாழ்வாரும் உள்ளனர். இடது கையில் ஊன்றிய கதை . இடது புறம் காவிரித்தாய் மண்டியிட்ட நிலையில் உள்ளார். கோயிலின் எதிரே குளம் உள்ளது. பெரிய திருமொழி ஏழாம் பத்து ஐந்தாம் திருமொழி கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளது.
மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட திருத்தலம். மூலஸ்தானத்தில் பெருமாளுடன் பிரகலாதனும் மார்க்கண்டேய முனிவரும் உள்ளனர். உபரிசரவசு என்ற மன்னன் தான் வானில் தேரில் வரும் பொழுது தேரின் நிழல் எதன் மீது பட்டாலும் அது கருகி விடும்படி வரன் பெற்று இருந்தான். ஒரு நாள் அவன் வானத்தில் தேரில் செல்லும் போது கீழே மாடு மேய்த்து கொண்டு இருந்த கண்ணனின் மீதும் அவர் மாடுகளின் மீதும் தேரின் நிழல் பட பசுக்கள் துன்பம் அடைந்தன. அவனின் செருக்கை அடைக்க நினைத்த கண்ணபிரான் அவனது தேர் நிழல் மீது தனது திருவடியை அழுத்த மன்னனின் தேர் நிலத்திலும் அழுந்தியது. இதனால் இந்த ஊரின் பெயர் தேரழுந்தூர் ஆகியது. பெருமாளும் சிவனும் சொக்கட்டான் ஆடிய மேற்கு நோக்கிய தேவார திருத்தலம் இக்கோயிலுக்கு அருகாமையில் உள்ளது. திருமங்கை ஆழ்வார் இங்கு மட்டும் தான் தாயாரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார்.
பிரபந்தம்:
செம்பொன் மதிள்சூழ் தென்னிலங்கைக்கிறைவன் சிரங்கள் ஐயிரண்டும் உம்பர்வாளிக்கு இலக்காக உதிர்த்தவுரவோன் ஊர்போலும் கொம்பிலார்ந்த மாதவிமேல் கோதி மேய்ந்தவண்டினங்கள் அம்பராவும் கண்மடவார் ஐம்பாலணையும் அழுந்தூரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 10கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு தேவாதிராஜன் திருக்கோயில், தேரழுந்தூர், மயிலாடுதுறை மாவட்டம் 609808.
தொலைபேசி:
04364 237952