அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம்

இறைவன்:
நீலமேகப்பெருமாள்
இறைவி:
கண்ணபுர நாயகி
தீர்த்தம்:
நித்ய புஷ்கரணி தீர்த்தம்
மங்களாசாசனம்:
பெரியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள்

கோயிலின் சிறப்புகள்:

     மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நீலமேக பெருமாள் இங்கு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். மற்ற கோயில்களில் உள்ளது போல அபயக் கரத்துடன் இல்லாமல் தானம் பெறும் கரத்துடன் உள்ளார். பக்தர்களின் துன்பங்களையெல்லாம் அவர் பெற்றுக்கொள்வார் என்பதை இது உணர்த்துவதாக உள்ளது. வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின் போது அதிகாலையில் சிவனாகவும் மாலையில் பிரம்மாவாகவும், இரவில் விஷ்ணுவாகவும் காட்சிதரும் மும்மூர்த்தி தரிசனம் இக்கோயிலின் சிறப்பாகும். இக்கோயில் விமானம் உத்பலாவதக (உத்பாலவதாக) விமானம். திருக்கோயிலை வலம் வரும் போது இத்திருக்கோயிலின் விமானம் கண்ணில் படுவதில்லை என்பது இதன் சிறப்பு.

வைகாசி, மாசி மாதங்களில் நடைபெறும் பிரம்மோற்சவத் திருவிழாக்கள் இங்கு சிறப்பானவை. மாசி மாதம் பௌர்ணமியின் போது கடற்கரையில் நடைபெறும் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறும். காரைக்கால் மாவட்டம், திருமலைராயன்பட்டினத்திலுள்ள கடற்கரை கிராமமான பட்டினச்சேரிக்கு வரும் சௌரிராஜப் பெருமாளுக்கு அங்குள்ள வெள்ளை மண்டபம் என்ற பகுதியில் அலங்காரம் செய்யப்படுகிறது. மீனவர்கள் அலங்கரிக்கும் நெற் கதிர்கள் தோரணமாகத் தொங்கவிடப்பட்டிருக்கும் பவளக்கால் சப்பரத்தில் தங்க கருடவாகனத்தின் மீதமர்ந்திருப்பார். பட்டினச்சேரி மீனவ மக்கள் சௌரிராஜப் பெருமாளை ’மாப்பிள்ளைப் பெருமாள்’ என்று அழைக்கின்றனர்.

     இக்கோவில் அர்ச்சகர் ஒருநாள், கோவிலுக்கு வந்த அரசனுக்கு சுவாமிக்கு சூடிய மாலையைத் தர அதில் ஒரு நீண்ட தலைமுடி இருந்தது. இதனால் கோபங்கொண்ட அரசனிடம், அர்ச்சகர் அது பெருமாளின் திருமுடி என்று சொல்லிவிட, அரசன் தான் நாளை வந்து பார்க்கும் போது பெருமாளுக்கு முடி இல்லையெனில் அர்ச்சகர் தண்டனைக்குள்ளாவார் என்று கூறிவிட்டுச் சென்றான். அர்ச்சகர் பெருமாளிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவரிடம் இரக்கம்கொண்ட பெருமாள் அவரைக் காப்பாற்ற திருவுளம் கொண்டார். அடுத்த நாள் அரசன் வந்து பார்த்தபோது உண்மையிலேயே பெருமாள் தலையில் திருமுடி இருந்தது. இந்நிகழ்வின் காரணமாகவே உற்சவர் சௌரிராஜப்பெருமாள் எனப் பெயர் கொண்டுள்ளார் என்பது தொன் நம்பிக்கை. உற்சவர் உலாவில் அமாவாசையன்று மட்டும் திருமுடி தரிசனம் காணலாம்.

திருக்கண்ணபுரத்தின் சிறப்புப் பிரசாதம் ’முனையதரன் பொங்கல்’. இந்த சிறப்புப்பொங்கலுக்கு தனி வரலாறு உண்டு. சோழ மண்டலச் சதகம் எனும் நூலின் 42 வது பாடலில் இவ்வரலாறு கூறப்படுகின்றது.

பாடல்:

புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொறிக்கறியும்
     அனைய சவுரிராசருக்கே ஆம் என்று அழுத்தும் ஆதரவின்
முனையதரையன் பொங்கல் என்று முகுந்தற்கு ஏறமுது கீர்த்தி
     வளையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே

முனையதரன் பொங்கல் வரலாறு:

     திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்து வந்த முனையதரையர் எனும் பக்தர் பெருமாள் திருப்பணிகளைச் செய்து வந்த போது, பஞ்சம் ஏற்பட்டது. அவரோ பெருமாளுக்குப் படைக்காமல் எதுவும் உண்ணாதவர். எனவே வீட்டில் இருக்கும் பொங்கலை அவரது மனைவியார் இறைவனுக்கு மானசீகமாகப் படைத்து வழிபட, திருக்கோயிலைத் திறக்கும் போது பொங்கல் மணம் வீசுவதையும் பொங்கல் முனையதரையர் வீடு வரையும் சிதறி இருப்பதையும் கண்டு அடியார் வீட்டில் படைத்த எளிய பொங்கலை பெருமாள் ஏற்றுக்கொண்டதை அனைவரும் அறிந்தனர். இதை நினைவுகூரும் விதமாக இன்றளவும் அர்த்த சாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் வழங்கப்படுகின்றது. இரண்டாம் கால நிவேதனமாக இரவு ஒன்பது மணிக்கு மேல் படைக்கப்படுகின்றது. அரிசி ஐந்து பங்கு, பாசிப்பயிறு முழுப்பயிறு ஐந்து பங்கு, இரண்டு பங்கு வெண்ணெய் உருக்கிய நெய் மற்றும் உப்பு கலந்து தயாரிக்கப்படும் நைவேத்தியப்பிரசாதம் இது. மிளகு, சீரகம் சேர்க்கப்படுவது இல்லை.

காளமேகப்புலவரும் கண்ணபுரம் பெருமாளும்:

     வைணவக் குடும்பத்தில் பிறந்த காளமேகம் சைவராக மாறிவிட்டாரே என்று கண்ணபுரம் பெருமாளுக்கு கோபம் ஏற்பட்டதாம். மழைநாளில் கண்ணபுரம் பெருமாள் கோயிலில் மழைக்காக புலவர் ஒதுங்க, கோயில் கதவுகளை மூடிப் பெருமாள் உள்ளே விடவில்லை.உடனே காளமேகப்புலவர் கவிதை ஒன்று இயற்றி, பெருமாளை நோக்கிப் பாட கோயில் கதவுகள் திறந்தனவாம். இத்திருத்தலத்துப் பெருமாள் மறுபிறவியின்றி வீடு பேறளிக்கும் பெருமாளாக வழிபடப்படுகின்றார்.

பஞ்சகிருஷ்ண தலங்கள்:

     தமிழ்நாட்டிலுள்ள தமிழ்நாட்டிலுள்ள பஞ்சகிருஷ்ண தலங்களில் இத்தலமும் ஒன்று. ஏனைய நான்கு பஞ்சகிருஷ்ண தலங்கள் கபிஸ்தலம், திருக்கோவிலூர், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோவில்கள் ஆகும்.

பிரபந்தம்:

உன்னையும்ஒக்கலையில்கொண்டுதமில்மருவி
     உன்னொடுதங்கள் கருத்தாயினசெய்துவரும்
கன்னியரும்மகிழக்கண்டவர்கண்குளிரக்
     கற்றவர்தெற்றிவரப் பெற்றஎனக்குஅருளி
மன்னுகுறுங்குடியாய்! வெள்ளறையாய் மதிள்சூழ்
     சோலைமலைக்கரசே! கண்ணபுரத்தமுதே
என்னவலம்களைவாய்! ஆடுகசெங்கீரை
     ஏழுலகும்முடையாய்! ஆடுகஆடுகவே!

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

நன்னிலத்திலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் திருப்புகலூர் என்னும் ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை    6.00  – 11.30  மற்றும் மாலை  5.00   – 8.30

கோயிலின் முகவரி:

அருள்மிகு நீளமேகப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம் மாவட்டம் 609704.

தொலைபேசி:

04364 270557, 9942656580

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...