இறைவன்: |
நாண்மதிய பெருமாள் |
இறைவி: |
தலைச்சங்க நாச்சியார் |
தீர்த்தம்: |
சந்திர புஷ்கரனி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 25வது திருத்தலம். பழந்தமிழர்கள் இயற்கைத் தாவரங்களின் பெயரிலேயே நிலத்திற்கும் அதனை சார்ந்த ஊருக்கும் பெயர் வைத்திருக்கின்றனர். எனவே தலைச்சங்காடு தலை+சங்கு+காடு என பிரித்து பார்த்தால் பொருள் விளங்கும். சங்கு பூக்கள் தோட்டங்களில் மிகுதியாகப் பயிரிட்டு இவ்வூர்க் கோயில்களுக்கும், இதனைச் சுற்றியுள்ள கோயில்களுக்கும் மிகுதியாக அனுப்பப்பட்டன. இந்தப் பூந்தோட்டங்களை ஒட்டியே தலைச்சங்காடு என்ற பெயர் உருவாகி இருக்க வேண்டும் எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. இத்தல பெருமாள் சிவபெருமானை போல சந்திரனை தலையில் சூடிய நிலையில் காட்சி தருகிறார். சந்திரன் தன் சாபம் நீங்க ஸ்ரீரங்கம், திருஇந்தளூர் ஆகிய தலங்களில் வழிபட்டு இங்கு வந்து குளத்தில் நீராடி பெருமாளை தரிசனம் செய்தார்.
இவ்வுலக உயிர்களை காப்பதற்காக சங்காரண்யேஸ்வரரை பூஜை செய்து தனது ஆயுதமாக சங்கை பெற்றுள்ளார். இதனால் இத்தலத்தில் மகாவிஷ்ணுவுக்கு தனி சன்னதி உண்டு. திருமாலுக்கு பாஞ்சசன்யம் எனும் சங்கினை வழங்கிய காரணத்தினால் சிவபெருமான் சங்காரண்யேஸ்வரர், சங்கவனநாதர் என்றும் அழைக்கப்பெறுகிறார். முன்பு, 40 ஆண்டுகாலம் வழிபாடின்றி இருந்த இத்திருத்தலத்தை வடுக நம்பி சீரமைக்க முயன்று, அவருக்குப் பின்னர் அவரது சீடர் சுந்தர ராமானுஜ தாசர் திருப்பணி செய்து அமைத்த திருக்கோயிலே இப்போதுள்ளது. திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி 2 பாசுரங்கள் இயற்றி உள்ளார். சம்பந்தரும் பாடியுள்ளார்.
பிரபந்தம்:
நலச்சங்க வெண் குழையும் தோடும் பெய்தோர் நால்வேதம் சொலச்சங்கை இல்லாதீர் சுடுகாடு அல்லால் கருதாதீர் குலைச் செங்காய்ப் பைங் கமுகின் குளிர்கொள் சோலைக்குயிலாலும் தலைச்சங்கைக் கோயிலே கோயிலாகத்தாழ்ந்தீர். கண்ணார்கண்ணபுரம் கடிகைகடிகமழும் தண்ணார்தாமரைசூழ் தலைச்சங்கமேல்திசையுள் விண்ணோர்நாண்மதியை விரிகின்றவெஞ்சுடரை கண்ணாரக்கண்டு கொண்டு களிக்கின்றது இங்குஎன்றுகொலோ
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் சீர்காழியிலிருந்து 17 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இரண்டு ஊர்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
தொலைபேசி:
9994729773
அருகிலுள்ள கோயில்கள்:
திருநாங்கூர், திருவாலி, திருநகரி, திருவெண்காடு, பல்லவனீஸ்வரம், கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளம் மற்றும் திருக்கடையூர்.