இறைவன்: |
தாமரையாள் கேள்வன் பெருமாள் |
இறைவி: |
தாமரைநாயகி நாச்சியார் |
தீர்த்தம்: |
கடக புஷ்கரனி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 39 வது திருத்தலம். பார்த்தனுக்காக (அர்ஜுனன்) உண்டான கோயிலானதால் பார்த்தன் பள்ளியாயிற்று. பார்த்தனாகிய அர்ஜூனனுக்கு இவ்விடத்து ஒரு கோயில் உண்டு. வருணன் இவ்விடத்து திருமாலைக்குறித்து கடுந்தவமியற்றித் தனக்கு பார்த்தசாரதியாக காட்சியளிக்குமாறு வேண்ட அவ்விதமே நடந்தபடியால் பார்த்தசாரதி பள்ளியென வழங்கிப் பிறகு பார்த்தன் பள்ளியாயிற்று என்பர். தசரதர் குழந்தை வேண்டி யாகம் செய்த போது நாராயணன் யாக குண்டத்திலிருந்து இருதேவியாருடன் காட்சி தந்து தானே மகனாக அவதரிப்பேன் என்று கூறினார். இருதேவியரும் ராமாவதார காலத்தில் அவருடன் வாழமுடியாது ஆகையால் அவரை கண் குளிர தரிசித்த இந்த காட்சி இத்தலத்தில் சிலையாக உள்ளது.
கவுரவர்களிடம் நாடிழந்து யாத்திரை மேற்கொண்ட அர்ஜுனன் தென்னாட்டில் பூம்புகார் சங்கம முகத்திற்கு நீராட வந்த போது அங்கிருந்த புரசங்காடு எனும் வனப்பகுதியினை அடைந்தார். வனப்பகுதியில் தாகம் எழ, நீர் தேடிச் சென்ற போது அகத்தியர் ஆசிரமம் சேர்ந்து, அவரிடம் தாகம் தீர கமண்டலத்திலிருந்து நீரைப்பருக அளிக்க வேண்ட, அகத்தியரும் தந்தார். ஆனால் அர்சுனனால் அருந்த இயலாதபடி நீர் மறையவே வருந்தி காரணம் வேண்ட, அகத்தியரும் ஞானதிருஷ்டி மூலம் காரணத்தைக் கண்டு தெரிவித்தார். பல்வேறு சோதனையிலும் காத்த கண்ணனை நினையாது என்னிடம் நீர் கேட்டது பொறுக்காததால் கண்ணன் செய்த லீலை இது என்று கூற, அர்சுனன், கண்ணனை நினைத்து வேண்ட, அங்கு தரிசனம் தந்த கண்ணன், அர்சுனனின் கத்தியால் பூமியை கீறச்சொல்ல, அதிலிருந்து நீர் வந்தது. அத்தீர்த்த நீரைப் பருகி தாகம் தீர்ந்தான் அர்சுனன். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க அங்கேயே கண்ணன் தங்கிவிட்ட தலம் பார்த்தன்பள்ளி என்றாயிற்று. ஆடி அமாவாசை தினத்தில் பூம்புகார் காவிரி சங்கமத்திற்கு எழுந்தருளச் செல்லும் போது அவ்விழாவை சோழ மன்னர்களே முன்னிற்று தீர்த்தவாரி உற்சவத்தை சிறப்பாக நடத்தியது பற்றிய குறிப்பு அடையாறு தமிழாராய்ச்சி நிறுவனம் (International Institute of Tamil Studies) வெளியிட்டுள்ள ’சங்க கால வரலாறு’ நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
பிரபந்தம்:
கண்ணனென்றும் வானவர்கள்காதலித்துமலர்கள்தூவும் எண்ணனென்றும் இன்பனென்றும்ஏழுலுகுக்காதிஎன்றும் திண்ணமாடநீடுநாங்கைத் தேவதேவனென்றென்றோதி பண்ணினன்னமென்மொழியாள் பார்த்தன்பள்ளிபாடுவாளே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு தாமரையாள் கேள்வன் திருக்கோயில், பார்த்தன்பள்ளி, திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
04364 – 275478