இறைவன்: |
சீனிவாச பெருமாள், அண்ணன் பெருமாள் |
இறைவி: |
அலர்மேல் மங்கை நாச்சியார் |
தீர்த்தம்: |
சுவேத புஷ்கரனி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்கள சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 38 வது திருத்தலம். திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி பின்னர் வெள்ளக்குளமாயிற்று. திருமங்கையாழ்வார் இத்தலத்து இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் இது அண்ணன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. திருமங்கையாழ்வாரால் மட்டும் பத்துப் பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலம். பிள்ளைப் பெருமாளையங்காரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார். அழகிய மணவாள மாமுனிக்கு இறைவன் இங்கு காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. 108 வைணவத் திருத்தலங்களில் திருமலையில் வழங்கப்படும் இறைவனின் அதே பெயர்களால் (ஸ்ரீநிவாசன் – அலர்மேல் மங்கைத் தாயார்) வழங்கப்படும் ஒரே தலம் இது ஒன்றே ஆகும். திருவேங்கடத்தானுக்கு வெள்ளக்குளத்தான் அண்ணன் என்பது நம்பிக்கையாதலால் திருப்பதிக்கு வேண்டிக் கொண்ட வேண்டுதலை இங்கே செலுத்துவது ஒரு மரபாகவே விளங்கி வருகிறது. எனவே இதனைத் தென்திருப்பதி என்றும் அழைப்பர். திருமங்கையாழ்வார் மணந்த குமுதவல்லியின் அவதாரத் தலம். நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கையாழ்வாரை ஆழ்வாராக மாற்றிய தலம் இதுவாகும். ஒரு மங்கையால் ஆழ்வாராக மாறினமையால் மங்கையாழ்வாராகி திருமங்கை ஆழ்வாரானார்.
பிரபந்தம்:
கண்ணார்கடல்போல் திருமேனிகரியாய் நண்ணார்முனை வென்றிகொள்வார் மன்னுநாங்கூர் திண்ணார்மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள் அண்ணா அடியேனிடரைக்களையாயே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ.தொலைவில் இவ்வூர் உள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து திறந்திருக்கும்.
கோயிலின் முகவரி:
அருள்மிகு சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருவெள்ளக்குளம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
9489856554, 04364 – 266434