கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து இங்கு பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். ஆனால் ஒருவர் மட்டும் குறைந்துள்ளார். பிரார்த்தனையின் பேரில் விநாயகர் அந்தணர் வடிவில் ஆயிரத்தெட்டாவது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து தந்தார். இதன் காரணமாக இங்குள்ள விநாயகர் ஆயிரத்தெண் விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். யாகத்தின் முடிவில் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறுமுகமங்கலம் கிராமத்திலேயே விநாயகர் தங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். விநாயகருக்கென தமிழகத்தில் எழுப்பப்பட்டு தேர், கொடிமரம் அமைத்து திருவிழா காணும் கோயில்களில் இது ஒரு முக்கியமான கோயிலாகும். ஆதிசங்கரர் தன் உடல் உபாதை நீங்க திருச்செந்தூர் செல்லும் வழியில் இத்தலத்தில் கணேச பஞ்சரத்தினம் பாடி, பின் திருச்செந்தூர் சென்று சுப்ரமண்ய புஜங்க ஸ்தோத்திரம் பாடி வியாதி நீங்கப் பெற்றார் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பலன்கள்:
அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்பட்டாலும், திருமணத்தில் தடை இருந்தாலும், படிப்பில் குறைபாடு இருந்தாலும், வழக்குகளில் இழுபறி இருந்தாலும் மோட்டார் வாகனங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டாலும், பணப்பிரச்னை தீரவும் இங்கு வந்து விநாயகரை வழிபட்டால் வேண்டிய காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தூத்துக்குடி திருசெந்தூர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில் 21KM தொலைவில் இக்கோயில் உள்ளது. தூத்துக்குடியிலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள தூத்துக்குடியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். தூத்துக்குடியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ஆயிரத்தெண் விநாயகர், திருக்கோயில், ஆறுமுகமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் – 628 802.
தொலைபேசி:
0461 232 1486