இறைவன்: |
பத்ரிநாராயணர் |
இறைவி: |
புண்டரீகவல்லி தாயார் |
தீர்த்தம்: |
இந்திர புஷ்கரனி தீர்த்தம் |
தல விருட்சம்: |
பலா |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 32வது திவ்யதேசம். அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளி யிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும்.
மூலவர் பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி அருள் புரிகிறார். அனைத்து நாட்களிலும் இவர் மீது சூரிய ஓளி படுகிறது. இதனால் சுவாமி எப்போதும் . அணையாத (நந்தா ) விளக்கு போல் பிரகாசிக்கிறார். இதன் மூலம் மக்களின் அறியாமையை அகற்றி அவர்களுக்கு ஒளியை அருளுகிறார். திருமங்கையாழ்வாரால் நந்தா விளக்கு என்று மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளார்.. இந்த திவ்யதேசத்தில் இவர்தான் பிரதான பெருமாள்.
திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.
கருட சேவை:
இங்கு ஒவ்வொரு வருடமும் தை மாதம் அமாவசைக்கு மறுநாள் கருட சேவை நடைபெறுகிறது. திருமங்கையாழ்வார் அனைத்து பெருமாள்களையும் மங்களாசாசனம் செய்வார். அமாவசை அன்று திருமங்கையாழ்வார் அதிகாலையில் திருநகரியில் இருந்து புறப்பட்டு திருக்காவளம்பாடி, ஸ்ரீகோபால க்ருஷ்ணன் திருமணிமாடக் கோயில், ஸ்ரீநாராயண பெருமாள் ஆகிய பெருமாள்களை காலையில் அந்த அந்த கோயில்களில் மங்களாசாசனம் செய்வார். மாலையில் திருவண்புருடோத்தமம், ஸ்ரீபுருஷோத்தம பெருமாள், திருவைகுந்த விண்ணகரம், ஸ்ரீவைகுந்தநாதன், திருத்தெற்றியம்பலம், ஸ்ரீரங்கநாதர், திரு அரிமேய விண்ணகரம், ஸ்ரீகுடமாடுகூத்தர் (ஸ்ரீசதுர்புஜ கோபாலன்) ஆகிய பெருமாள்களை அந்த அந்த கோயில்களில் மங்களாசாசனம் செய்வார். அனைத்து பெருமாள்களும் தங்கள் கோயில்களில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு நாங்கூர் மணிமாட கோயில் முன்பு எழுந்தருள்வர். அனைத்து பெருமாள்களுக்கும் ஒரே நேரத்தில் தீபாராதனை காட்டப்படும். தொடர்ந்து 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்திலும், குமுதவல்லி நாச்சியாருடன் திருமங்கையாழ்வார், மணவாளமாமுனிகள் சகிதம் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்து சிறப்பு தீபாராதனை காண்பித்து கருட சேவை நடைபெறும். பின்பு திருவீதிகளில் அனைத்து பெருமாள்களும் திருவீதி உலா வந்து மறுநாள் காலை அனைத்து பெருமாள்களும் அவரவர் திவ்ய தேசங்களுக்கு திரும்புவர் . திருமங்கையாழ்வார் திருநகரிக்கு புறப்படுவார். திருத்தேவனார்த் தொகை, ஸ்ரீமாதவ பெருமாள் கோயிலில் மங்களாசாசனம் செய்த பின் திருநகரிக்கு சேருவார். பெருமாளை பெரிய திருவடியான கருட வாகனத்தில் சேவித்தால் மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம்.
பிரபந்தம்:
நந்தாவிளக்கே! அளத்தற்கு அரியாய்! நரநாரணனே! கருமாமுகில் போல் எந்தாய் எமக்கே அருளாயெனநின்று இமையோர் பரவும் இடம் எத்திசையும் கந்தாரம் அந்தேன் இசைபாடமாடே களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து மந்தாரம் நின்று மணமல்குநாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என்மனனே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இக்கோயில் சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.30 – 11.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயில் முகவரி:
அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர் மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
04364-256424, 9443985843