இறைவன்: |
புருஷோத்தமர் |
இறைவி: |
புருஷோத்தமநாயகி |
தீர்த்தம்: |
திருப்பாற்கடல் தீர்த்தம் |
தல விருட்சம்: |
பலா, வாழை |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 30வது திவ்யதேசம். தமிழ்நாட்டில் உள்ள வைணவத் திருத்தலங்களில் புருடோத்தமன் (புருஷோத்தமன்) என்ற பெயரில் இறைவன் எழுந்தருளியிருப்பது இங்கு மட்டுமே ஆகும். வடநாட்டில் அயோத்யாவில் உறையும் பெருமாள் புருஷோத்தமன் ஆவார். இங்கும் அதே பெயருடன் உறைவதால் இத்தலத்திற்கு திருவண்புருடோத்தமம் என்று பெயர். இவ்விறைவனின் வள்ளல் தன்மையை உயர்வுபடுத்திக் காட்ட வண்புருடோத்தமன் என அழைக்கப்படுகிறார். எனவே இத்தலம் வண்புருடோத்தமம் ஆயிற்று.
திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் பாடல்பெற்றது இக்கோயில். மணவாள மாமுனிகள் இங்கு வந்து சென்றுள்ளார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனையும் எடுத்துச் செல்வர்.
வியாக்ரபாத முனிவர் எனப்படும் புலிக்கால் முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் வேலையை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம்பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யுவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அருள் புரிந்து வியாக்ரபாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பது இத்தலத்தோடு பேசப்படும் வரலாறாகும்.
பிரபந்தம்:
கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும் அம்பினாலறுத்து அரசவன் தம்பிக்கு அளித்தவனுறை கோயில் செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ் வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சீர்காழியிலிருந்து திருவெண்காடு செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. பேருந்து வசதிகள் உண்டு.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.30 – 11.00 மற்றும் மாலை 6.00 – 8.00
கோயில் முகவரி:
அருள்மிகு புருஷோத்தமர் திருக்கோயில், திருவன்புருஷோத்தமம், திருநாங்கூர், மயிலாடுதுறை மாவட்டம் 609106.
தொலைபேசி:
04364-256221