கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் கலியுக வரதராஜர் என்ற திருநாமத்துடன் 12 அடி உயரமுள்ள கம்பமாக வீற்றிருந்து அருள்புரிகிறார். மூலஸ்தானத்தில் 12 அடி உயரத்திலான கம்பத்தை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பது போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடக்கிறது. சிலை வடிவ தரிசனம் இங்கு கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு கிடையாது. மாறாக உற்சவர் மூர்த்தி புறப்பாடு உள்ளது. தாயாருக்கு என்று தனி சன்னதி கிடையாது. மூலவரே கம்பத்தில் இருப்பதால் தாயாரும் உடனிருப்பதாக ஐதீகம். உற்சவர் கலியுக வரதராஜப்பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்புரிகிறார். விவசாய விளை நிலங்களில் உணவு தானியங்கள் விளைச்சல் நன்றாக இருந்தால் குறிப்பிட்ட அளவு உணவு பொருட்களை கோயிலுக்கு செலுத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். கோயிலை சுற்றிலும் ராட்சத அளவிலான தானிய கிடங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பக்தர்கள் தங்கள் விளைவித்த தானியங்களை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர். கோயிலில் உள்ள தசாவதார மண்டபத்தில் பத்து அவதாரங்களின் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளது. மகாலிங்க மரத்தை தலவிருட்சமாக கொண்ட கோயில் இது என்பது சிறப்பாகும்.
பலன்கள்:
விவசாயம் செழிக்க இந்த பெருமாளை வேண்டி பயனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
அறியலூரிலிருந்து 6KM தொலைவில் இக்கோயில் உள்ளது. அரியலூரில் இருந்து சிற்றுந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
அரியலூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில், கல்லங்குறிச்சி, அரியலூர் மாவட்டம் – 621 705
தொலைபேசி:
04329- 228 890