இறைவன்: |
சௌந்திரராஜ பெருமாள் |
இறைவி: |
சௌந்திரவல்லி தாயார் |
தீர்த்தம்: |
சார புஷ்கரணி தீர்த்தம் |
மங்களாசாசனம்: |
திருமங்கையாழ்வார் |
கோயிலின் சிறப்புகள்:
மங்களாசாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 17வது திருத்தலம். நான்கு யுகங்களிலும் வழிபடப்படும் தலம். ஆதிசேஷன் தவம் புரிந்து பெருமாளின் சயனமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட திருத்தலம். ஆதிசேஷன் வழிபட்ட காரணத்தாலேயே இவ்வூர் நாகன்பட்டினம் என்றாகி, பின்னர் நாகப்பட்டினம் என மாறியது. திரேதாயுகத்தில் பூமாதேவி தவமிருந்த திருத்தலம், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயர் தவமிருந்த திருத்தலம். ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது பலி பிடமும், கொடி மரமும் உள்ளன. அடுத்து கருடாழ்வார் சன்னதி உள்ளது. கோயிலின் வலது புறம் கோயில் குளம் உள்ளது. கருவறையில் மூலவர் சௌந்தரராஜப் பெருமாள் நின்ற நிலையில் உள்ளார். மூலவர் சன்னதிக்கு முன்பாக உள்ள மண்டபத்தின் வாயிலில் இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். அம் மண்டபத்தில் சௌந்தரராஜப் பெருமாள் ரெங்கநாதனாக கிடந்த திருக்கோலத்தில் உள்ளார். இச்சன்னதியில் அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கல சிலையில் நரசிம்மரின் ஒரு கை ப்ரஹலாதனின் தலையை தொட்டும் இன்னொரு கை அபய ஹஸ்தமாகவும் விளங்குகிறது. மற்ற கைகள் ஹிரண்ய வாதம் செய்கின்றது. அடுத்து சேனை முதல்வர் சன்னதியும், ஆழ்வார் ஆச்சார்யன் சன்னதியும் உள்ளன. கருவறையைச் சுற்றியுள்ள உள் திருச்சுற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. திருச்சுற்றில் வைகுண்டநாதர் சன்னதி, சௌந்தரவள்ளித் தாயார் சன்னதி, சீனிவாசப்பெருமாள் சன்னதி, ஆண்டாள் சன்னதி, ராமர் சன்னதி, வீர ஆஞ்சநேயர் சன்னதி ஆகிய சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதிக்குமுன்பாக கொடி மரம் உள்ளது. இத்திருத்தலம் குறித்த தகவல்கள் பிரம்மாண்ட புராணத்தின் உத்திர காண்டத்தில் 10 அத்தியாயங்களில் சௌந்திர ஆரண்ய மகிமை என்ற பெயரில் உள்ளன.
பிரபந்தம்:
பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கிளஞ்சோதியகலத்து ஆரம் மின் இவர் வாயில் நல்வேத மோதும் வேதியர் வானவராவர் தோழீ என்னையும் நோக்கி என்னல்குலும் நோக்கி ஏந்திளங்கொங்கையும் நோக்குகின்றார் அன்னையென்னோக்குமென்றஞ்சுகின்றேன் அச்சோ ஒருவரழகியவா!
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
நாகப்பட்டினம் நகரத்திலேயே இக்கோயில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 – 12.00 மற்றும் மாலை 5.30 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சௌந்திரராஜ பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம் 611001.
தொலைபேசி:
04365 221374, 9442213741