கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் விநாயகர் மொட்டை விநாயகர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் பார்வதிதேவி தனது பாதுகாப்புக்காக ஒரு வாலிபனைப் படைத்தாள். அவனுக்கு “கணபதி’ என பெயர் சூட்டி தனது லோகத்தின் காவலுக்கு நிறுத்தி வைத்தாள். ஒருமுறை தேவர்கள் அம்பாளை தரிசிக்க வந்தனர். அவர்களை அனுமதிக்க கணபதி மறுத்து விட்டார். அவர்கள் கணபதியை மீறிச்செல்ல முயலவே, அவர்களுடன் போரிட்டு விரட்டி விட்டார். தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவரும் கணபதியிடம் நேரில் வந்து பேசிப் பார்த்தார். சிவனையும் அனுமதிக்க கணபதி மறுக்கவே, கோபம் கொண்டது போல் நடித்த சிவன், கணபதியின் தலையை வீழ்த்தி விட்டார். இதையறிந்த பார்வதி, தன்னால் உருவாக்கப்பட்ட கணபதிக்கு மீண்டும் உயிர் கொடுக்கும்படி வேண்டினாள். சிவன் அவருக்கு யானையின் தலையைப் பொருத்தி முழு முதல் பொருளாக்கினார். தான் உட்பட யாராக இருந்தாலும் தன் மைந்தன் கணபதியை வணங்கிய பிறகே பிறரை வணங்க வேண்டும் என்றார். விநாயகரை கணங்களுக்கெல்லாம் அதிபதியாக்கினார். சிவன், கணபதியின் தலையை வீழ்த்திய நிகழ்வை உணர்த்தும் விதமாக விநாயகர் இங்கு தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருளுகிறார். தலை இல்லாமல் விநாயகரைக் கொண்ட ஒரே கோயில் இது என்பது இதன் சிறப்பாகும். வியாபாரிகள் தினமும் தங்களது தொழிலை தொடங்கும் முன்பு கடைச் சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர். இவ்வாறு செய்வதால் தமது தொழில் சிறப்பதாக அவர்கள் நம்புகின்றனர். எனவே இவர் வியாபார பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.
பலன்கள்:
கல்வியில் சிறப்பிடம் பெற, வியாபாரம் விருத்தியடைய இவரிடம் வேண்டி பலனடையலாம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மதுரை கீழமாசி வீதியில் மீனாட்சி அம்மன் கோயில் தேருக்கு அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
தங்கும் வசதி:
மதுரையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும்.
கோயில் முகவரி:
அருள்மிகு மொட்டை விநாயகர். திருக்கோயில், கீழமாசி வீதி, மதுரை – 625 001.
தொலைபேசி:
0452 4380144