கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் ராமலிங்கர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இத்தலத்து அம்மனின் பெயர் பர்வதவர்தினி ஆகும். இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான் ராமேஸ்வரத்தில் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க சிவபூஜை செய்து அயோத்தி திரும்பும் வழியில் கரண், தூஷணன் ஆகிய அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும் தங்களை பின்தொடர்வதை உணர்ந்தார். அந்த தோஷம் நீங்க சிவபூஜை செய்ய விரும்பினார். இதற்காக இங்கு 107 சிவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்தார். அவ்வேளையில் ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான் தன் தோஷம் நீங்கப்பெற்றார். பிரதான சிவனுக்கு ராமரின் பெயரால் ராமலிங்கசுவாமி என்ற பெயர் ஏற்பட்டது. அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால் அனுமந்தலிங்கம் என்ற பெயரில் உள்ளது. ராமலிங்கசுவாமி சன்னதி விமானம் ராமேஸ்வரம் கோயில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னதி விமானம் காசி விஸ்வநாதர் கோயில் அமைப்பிலும் உள்ளது. எனவே, காசி, ராமேஸ்வரம் செல்ல முடியாதோர் இங்கு வழிபடுகின்றனர். ராமபிரான் பாவம் நீங்கப்பெற்றதால் தலத்திற்கு பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. கீழ்ராமேஸ்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. ஒரே கோயிலில் 108 லிங்கங்கள் அதுவும் மூலவர்களாக அருள்புரியும் அற்புத தலம் இதுமட்டுமேயாகும்.
பலன்கள்:
அறியாமல் செய்த பாவம், பித்ருதோஷம் நீங்க இங்கு வழிபாடு செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் 15KM தொலைவில் பாபநாசம் உள்ளது. பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே கோயில் உள்ளது. கும்பகோணத்திலிருந்தும் தஞ்சாவூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள கும்பகோணத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம். கும்பகோணத்தில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில், பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம் – 614 205.
தொலைபேசி:
97901 16514