இறைவன்: | அமிர்தகடேஸ்வரர் |
இறைவி: | அபிராமி அம்மன் |
தீர்த்தம்: | அமுதம் |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 47 வது ஆலயம். அட்ட வீரட்ட தலங்களுள் ஒன்று. எமனை சம்ஹராம் செய்த தலம். இந்த கோவிலில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் லிங்கமானது சுயம்புவாக தோன்றியது. இங்கு வீற்றிருக்கும் மூலவர் ஒரு லிங்கமாக இருந்தாலும் உற்றுப் பார்க்கும் சமயத்தில், மற்றொரு லிங்கம் பிம்பமாக நம் கண்களுக்குப் புலப்படும் என்பது இந்தக் கோவிலின் தனி சிறப்பு. சிவபெருமான் எமனை காலால் எட்டி உதைத்து சம்ஹாரம் செய்த திருத்தலமும் இது தான். மிருகண்டு முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் நீண்ட நாட்களாக குழந்தை வரம் இல்லாத சமயத்தில், முனிவர் சிவனை நினைத்து செய்த கடும் தவத்தின் மூலம் ஒரு வரத்தை பெற்றார். அந்த சிவனின் வரத்தினால் முனிவருக்கும், மருத்துவதி அம்மைக்கும் பிறந்த குழந்தைதான் மார்க்கண்டேயன். மார்க்கண்டேயனுக்கு 16 வயது ஆனவுடன் ஆயுள் முடிந்துவிடும் என்ற வரலாறு நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. – தன் பிறப்பை பற்றிய ரகசியத்தை அறிந்து கொண்ட மார்க்கண்டேயன் 107 சிவத்தலங்களை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தான். 108 வதாக திருக்கடையூரில் உள்ள சிவ தல த்திற்கு வந்து தரிசனம் செய்தான். அன்றுதான் மார்க்கண்டேயனுக்கு கடைசி நாளாக இருந்தது. எமதர்மன் மார்க்கண்டேயரின் உயிரை பறிப்பதற்காக பாசக்கயிற்றை வீச நேராகவே வந்து விட்டார். எமனை பார்த்து பயந்த மார்க்கண்டேயர் ஓடிச்சென்று அமிர்தகடேஸ்வரரை இறுக்க கட்டிக் கொண்டார். எமன் பாசக்கயிற்றை வீச, அந்த கயிறு மார்க்கண்டேயர் மீது மட்டும் விழாமல் லிங்க உருவில் இருந்த அமிர்தகடேஸ்வரரையும் சேர்த்து சுருக்கு போட்டு இழுத்து விட்டது. சிவபெருமானையே பாசக் கயிற்றால் கட்டி இழுத்த எமதர்மரை, எம்பெருமான் சும்மா விட்டு விடுவாரா? கோபமடைந்த சிவபெருமான் எமதர்மனை கீழே தள்ளி சூலாயுதத்தால் சம்ஹாரம் செய்து விட்டார். அதன்பின்பு மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறாக இருக்கவும், சிரஞ்சீவியாக இருக்கும் வரத்தையும் சிவபெருமான் அளித்துவிட்டார். எமதர்ம ராஜா இல்லையென்றால் இந்த பூமி தாங்குமா? இறப்பு இல்லாத பூலோகத்தை பூமாதேவி எப்படி தாங்குவாள்? பாரம் தாங்காத பூமாதேவி ஈசனிடம் வேண்டி முறையிட, கோபம் தணிந்த சிவபெருமான் எமதர்மனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். சிவபெருமான் எமதர்மராஜாவின் உயிரை பறித்ததும் இத்தலத்தில் தான், உயிர் கொடுத்ததும் இத்தலத்தில் தான். காலனை சம்ஹாரம் செய்ததால் இத்தலத்தில் சிவபெருமான் காலசம்ஹாரமூர்த்தி என்ற பெயரையும் கொண்டு அழைக்கப்படுகிறார். இவருக்கு தனி சன்னதி உள்ளது. ஒருமுறை சிவபெருமானை தரிசனம் செய்து ஞான உபதேசம் பெறுவதற்காக பிரம்மா கைலாயத்திற்கு சென்றார். ஆனால் அந்த சமயம் பிரம்மாவிற்கு சிவபெருமான் ஞான உபதேசத்தை தரவில்லை. அதற்கு பதிலாக அவர் கையில் வில்வ விதைகளைக் கொடுத்து, பூலோகத்தில் இந்த விதைகள் விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் வில்வ மரம் எங்கு வளர்கிறதோ அந்த இடத்தில் ஞான உபதேசம் தருவதாக கூறி விட்டார். இதனை நிறைவேற்ற பிரம்மா பூலோகத்தில் வந்து சிவனை நினைத்து வில்வ விதைகளை விதைத்த இடம் தான் இத்தலம். அந்த இடத்தில் சிவபெருமான் பிரம்மாவிற்கு காட்சி தந்து ஞான உபதேசத்தை கொடுத்துவிட்டார். பிரம்மனுக்கு காட்சியளித்த எம்பெருமான் இந்த திருத்தலத்தில் ஆதி வில்வவனநாதராக, தனி சன்னதியில் பக்தர்களுக்கு இன்றளவும் காட்சி தந்து வருகின்றார். அடுத்ததாக பாற்கடலில் தேவர்கள் அமிர்தத்தை எடுத்தவுடன் விநாயகரை வணங்காமல் அதை பருகச்சென்றனர்.இங்குள்ள பிள்ளையார் பெயர் கள்ளவாரான பிள்ளையார். இவர் கையில் அமிர்த கலசம் உள்ளது . இதனை கண்ட விநாயகர் அமிர்த குடத்தை எடுத்து மறைத்து வைத்து விட்டார். இதை அறிந்த தேவர்கள் விநாயகரை வணங்கி அமிர்தத்தை பெற்று சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அந்த சமயம் அந்த அமிர்த குடம் இருந்த இடத்திலிருந்து சுயம்புலிங்கம் உருவானது. அமிர்தத்தில் இருந்து தோன்றியதால் இங்குள்ள சிவபெருமான் அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரினைப் பெற்றார் என்று கூறுகிறது வரலாறு. இது குங்கிலியக்கலய நாயனார், காரி நாயனார் வாழ்ந்த தலம். அகத்தியர், புலஸ்தியர், துர்க்கை, வாசுகி, பூமி தேவி முதலானோர் வழிபட்ட திருத்தலம். அபிராமி அந்தாதி பாடப்பட்டதும் இத்தலத்திலேயாகும் தை அமாவாசை அன்று அம்பிகையின் முக அழகை தரிசித்துக் கொண்டிருந்த அபிராமி பட்டர் பௌர்ணமி என்று தவறாக சரபோஜி மன்னரிடம் சொல்ல, அதனால் கோபமுற்ற மன்னரிடம் இருந்து காக்கும்படிக்கு அபிராமி அந்தாதி பாடி அமாவாசையை பௌர்ணமியாக மன்னருக்கு மாற்றிக் காட்டிய அற்புதம் நிகழ்ந்த தலம். இங்கு நவக்கிரக சந்நிதி இல்லாதது சிறப்பாகக் கூறப்படுகிறது.
மார்க்கண்டேயருக்காக சிவபெருமான் எமனை உதைத்துத் தள்ளியதலமாதலாலும் , இறைவன் குடம் வடிவில் உள்ளதாலும் மணிவிழா, பவளவிழா, சதாபிஷேகம் ஆகிய விழாக்களை இத்தலத்தில் பக்தர்கள் கொண்டாடுகின்றனர். இந்த கோயில் தருமை ஆதீன கோயிலாகும்.
தேவாரம்:
பொள்ளத்த காய மாயப் பொருளினைப் போக மாதர்
வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் விரும்புமின் விளக்குத் தூபம்
உள்ளத்த திரியொன் றேற்றி யுணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக் கழிப்பர் போலுங் கடவூர்வீ ரட்ட னாரே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் 26 கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையிலிருந்தும், சீர்காழியிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
திருக்கடையூரில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன. மயிலாடுதுறை, சீர்காழியில் தங்கி அங்கிருந்தும் செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 – 1.00 மற்றும் மாலை 4.30 – 8.30
கோயிலின் முகவரி:
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், திருக்கடையூர், மயிலாடுதுறை மாவட்டம் 609311.
தொலைபேசி:
கோயில் அலுவலகம்: 04364 287429
T. R. விஸ்வநாத குருக்கள்: 8489238904