கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் அம்மன் பத்ரகாளியம்மனாக வீற்றிருந்து அருள்புரிகிறாள். சுடர் விட்டு பரவும் ஜூவாலை கொண்ட தலை, மண்டை ஓடு கீரிடம், எட்டு கைகளில் உடுக்கை, கட்கம், கபாலம், சூலம், மகிஷனின் தலைமேல் கால் வைத்திருக்கும் பாவனை, விஸ்மய ஹஸ்தம் (செயற்கரிய செயல்களை செய்யும் போது வியந்து பாராட்டும் சிறப்பம்சம்) நாகம், மணி, கிண்ணத்துடன் அம்மன் எட்டு கைகளுடன் அருள்புரிகிறாள். மகிஷனின் தலையில் கால் வைத்துள்ளதால், நவராத்திரி நாயகியான மகிஷாசுரமர்த்தினியாகவும் கருதப்படுகிறாள். இங்கு நடக்கும் குண்டம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. திருமணம், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல் வியாபாரம் துவங்குதல், கல்வி போன்ற விஷயங்களுக்கு அம்மன் சிரசில் பூ வைத்து, தொழில் துவங்கலாமா என வாக்குக் கேட்கும் வழக்கம் உள்ளது. பெண்கள் தங்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்க, தங்கள் தாலியையே காணிக்கையாக தருவதாக அம்பாளிடம் வேண்டுகின்றனர். குறிப்பாக, உயிருக்கு போராடும் கணவருக்காக இத்தகைய பிரார்த்தனையைச் செய்வது மரபாக உள்ளது. அந்தி என்றால் இறுதி என பொருள்படும். ஆகையால் இந்த அந்தியூர் பத்ரகாளியை வணங்குவதால், எந்த பிரச்னையும் இறுதி முடிவுக்கு வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் உள்ள வீர காலபைரவரும் புகழ்பெற்று விளங்குவது சிறப்பாகும்.
பலன்கள்:
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், நிலம் வாங்குதல், விற்றல், கிணறு வெட்டுதல், வியாபாரம் துவங்குதல், போன்ற தொழில்கள் செய்யவும் இங்கு பிரார்த்தனை செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
ஈரோடு மாவட்டம் பவானியிலிருந்து 19KM தொலைவில் இக்கோயில் உள்ளது. பவானியிலிருந்தும், ஈரோட்டிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள ஈரோட்டில் தங்கி அங்கிருந்து செல்லலாம். பவானியிலும் தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பத்திரகாளி அம்மன் திருக்கோயில், அந்தியூர், ஈரோடு மாவட்டம்.
தொலைபேசி:
04256 261774