கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் லக்ஷ்மி நாராயணர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். முன்னொரு காலத்தில் வத்திராயிருப்பு அருகிலுள்ள சதுரகிரி மலை மகாலிங்க சுவாமி கோயிலில் வசித்த சில சித்தர்கள் நவபாஷாணத்தில் ஒரு லட்சுமி நாராயணர் சிலை செய்து வழிபட்டு வந்தனர்.ஒருசமயம் வெள்ளப்பெருக்கு ஏற்படவே, சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காரிசேரியில் கரை ஒதுங்கியது.சிலையை எடுத்த மக்கள், இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினர். இதுவே இங்குள்ள கோயிலாகும். பெருமாள் நான்கு கரங்களுடன், வலது காலை மடித்து லட்சுமி தாயாரை மடியில் வைத்து, அணைத்த கோலத்தில் காட்சி தருவது சிறப்பாகும். பழனி முருகனைப் போல் நவபாஷாணத்தால் செய்யப்பட்ட பெருமாள் இது மட்டுமே என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
பலன்கள்:
பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்படும் தீர்த்தத்தை சாப்பிட்டால் நோய்கள் நீங்குவதாகவும் மற்றும் அணைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சிவகாசி விருதுநகர் சாலையில் இருந்து பிரிந்து செல்லும் சாலையில், சிவகாசியிலிருந்து 10KM தொலைவில் இக்கோயில் உள்ளது. மெப்கோ பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் செல்லலாம். சிவகாசியிலிருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே நகரப் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள சிவகாசியிலோ அல்லது விருதுநகரிலோ தங்கி அங்கிருந்து செல்லலாம். இரண்டு ஊர்களிலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 6.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு லட்சுமி நாராயணர் திருக்கோயில், காரிசேரி, விருதுநகர் மாவட்டம் – 626 119.
தொலைபேசி:
98423 64059