கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் கைலாசநாதர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். வங்காள விரிகுடா கடற்கரையில் உள்ள கோயில் இது. இப்பகுதியில் வசித்த கடல் வணிகர்கள் பயணத்தின்போது பாதுகாப்பாக இருக்கவும், தொழில் சிறக்கவும் சிவபெருமானுக்கு ஒரு கோயில் எழுப்பினர். காலப்போக்கில் கடல் சீற்றத்தால் கோயில் மறைந்துவிட்டது. பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த சிவபக்தனான பல்லவ மன்னன், சிவனுக்கு கோயில் எழுப்பும் ஆயத்தப்பணிகளை துவங்கினான். அவனது கனவில் தோன்றிய சிவன், அழிந்து போன கோயிலின் லிங்கம் ஓரிடத்தில் மறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். மன்னன் லிங்கத்தைக் கண்டெடுத்து கோயில் எழுப்பி அங்கு பிரதிஷ்டை செய்தான். சுவாமிக்கு கைலாசநாதர் என பெயர் ஏற்பட்டது. இத்தலத்து அம்பிகை பொன்னைப்போல மின்னுபவளாகவும், தம்மை வழிபடும் பக்தர்களுக்கு பொன் போன்ற வாழ்க்கையைத் தருபவளாகவும் அருளுவதால் கனகவல்லி என்று அழைக்கப்படுகிறாள். லிங்கத்தின் ஆவுடையாரில் கோயில் குறித்த செய்திக் குறிப்பை கல்வெட்டாக பொறித்துள்ளனர். பவுர்ணமி நாட்களில் சிவன், அம்பிகைக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். முன்னோர்களுக்கு முறையாக தர்ப்பணம் செய்யாதவர்கள், பிதுர்தோஷ நிவர்த்திக்காக அமாவாசையன்று கடலில் நீராடி சுவாமியை வழிபடுகிறார்கள். புரட்டாசி மகாளய அமாவாசையன்று இந்த வழிபாட்டைச் செய்வது மேலும் சிறப்பாகும்.
பலன்கள்:
தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும், தொழிலில் வெற்றியடைவும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்கவும் இக்கோயிலில் வேண்டி பயனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தாம்பரத்தில் இருந்து 29KM தொலைவில் இக்கோயில் உள்ளது. தாம்பரம், தி. நகர் போன்ற இடங்களில் இருந்து மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம், செங்கல்பட்டு மாவட்டம் – 603 112.
தொலைபேசி:
044 2747 2235, 98403 64782