அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

இறைவன்: காயாரோகணேஸ்வரர்   
இறைவி: நீலாயதாட்சி 
தீர்த்தம்: தேவ  தீர்த்தம், புண்டரீக தீர்த்தம் 
பாடியோர்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் 

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 82 வது ஆலயம்.  நாகராஜனாகிய ஆதிசேஷனால் பூஜிக்கப்பெற்றமையால்  நாகை என்னும் பெயர்பெற்றது. புண்டரீக முனிவரைக் காயத்தோடு ஆரோகணம் செய்துகொண்டமையால் காயாரோகணம் என்னும் பெயர் எய்தியது. அதுவே காரோணம் என்று மருவியது.   

          அதிபத்தநாயனார் திருஅவதாரம்  செய்த தலம் . சுந்தர மூர்த்தி நாயனார் காற்றனைய வேகத்தையுடைய குதிரை, ஒளியுள்ள முத்துமாலை, சிறந்தபட்டு, முதலானவைகளை வேண்டிப் பெற்றார். விடங்கர் தலங்கள் ஏழினுள் ஒன்று.  திருக்கோயிலில் முதலில் இருக்கும் விநாயகருக்கு நாகாபரண விநாயகர் என்று பெயர். உள்ளேயிருக்கும் பிள்ளையாருக்கு மாவடிப் பிள்ளையார் எனப்பெயர். இத்தலத்து அம்மன் மிகச்சிறப்புடையவர். இத்தலத்தைப்பற்றி “காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, நாகை நீலாயதாட்சி” என்னும் பழமொழி வழங்குகின்றது.  இக்கோயிலுக்குத் திருஞானசம்பந்தர் பதிகம் இரண்டு, திருநாவுக்கரசு நாயனார் பதிகம் நான்கு, சுந்தரர் பதிகம் ஒன்று ஆக ஏழு பதிகங்களிருக்கின்றன.  ‘கற்றோர் பயில் கடல் நாகைக் காரோணம்’ என்று ஞான சம்பந்தர் கூறியிருத்தலாலும், பாக்கு விளையாடிக்கொண்டிருந்த பாலகர்களை நோக்கிப் பசியினால் காளமேகப்புலவர் ‘சோறு எங்கு விக்கும்’ என்று கேட்டதற்கு, அப்பாலகர்கள் தொண்டையில் விக்கும் என்று பதில் கூறினார்கள். (விற்கும் – என்பதைப் பேச்சுவழக்கில் விக்கும் எனக் கூறுதலுண்டு). உடனே புலவர் கோபித்து அவர்கள் மீது வசைபாடும் பொருட்டு “பாக்குத் தறித்து விளையாடும் பாலகர்க்”  என்பது வரை சுவரில் எழுதி விட்டு, பசி தீர்ந்தபிறகு எஞ்சிய பகுதியைப் பாடி முடிவு செய்வதாக வைத்துவிட்டுப் பசியாற்றிக் கொண்டு அவ்விடம் வந்தபொழுது, அவர் எழுதியதற்குமேல் “நாக்குத் தமிழுரைக்கும் நன்னாகை” என்று  அந்த இளஞ்சிறார்கள்  எழுதியதைப் பார்த்து மதிமயங்கிச் சென்றதாகத் தனிப்பாடல் ஒன்று இருக்கின்றது. இவைகளால் இவ்வூர் மக்களின் கல்வித்திறம் புலப்படும். இவ்வூரில் இருந்த காத்தான் சத்திரத்தைப் பற்றிய காளமேகப் புலவர் பாடலொன்றும் உண்டு. 

         இவ்வூரில் மங்களாசாசனம் பெற்ற திருமால் கோயில் சௌந்தரராஜப்பெருமாள் என்ற பெயரால் விளங்குகிறது. மேலும் மேலைக்கயா என்ற சட்டநாதர் கோயில் ஒன்று இருக்கிறது. மற்றும் காவல் தெய்வமாகிய கோதண்ட ஐயனார் கோயில், அமர்ந்தீசர் கோயில், மலைச்சுரம் கோயில் (கயிலாயநாதர்) குமரர் கோயில், நடுவண் நாதர் கோயில், அழகியநாதர் கோயில் முதலிய பல கோயில்கள் இருக்கின்றன.  மடைப்பள்ளிக்கு எதிரில் அதிபத்தர் திருவுருவம் உள்ளது. மாமரம் தலமரம். அதனடியில் மாவடிப்பிள்ளையார் இருக்கிறார். இராசதானி மண்டபத்தில் தியாகராசர் இருக்கிறார். சுந்தரவிடங்கர்.   புண்டரீகரிஷியை சரீரத்தோடு ஏற்றுக்கொண்டதனால் காயாரோகணர் என்று வந்ததாகப் புராணம் கூறும். நீலாயதாட்சி என்ற வடமொழிப்பெயர், கருந்தடங் கண்ணி எனத் தமிழில் வழங்கும். இது சக்தி பீடங்கள் அறுபத்து நான்கில் ஒன்று. மாடங்களில் சிற்பவேலை அழகாக இருக்கிறது. இவ்வூர்த்தேர் கண்ணாடி ரதம் அல்லது பீங்கான் ரதம் என வழங்கும்.  ஆதிசேஷன், புண்டரீக முனிவர், அகத்தியர், அம்பிகை, முருகன், திருமால், வசிட்டர், முசுகுந்தன், அரசகேசரி, விசித்திரகவசன், விரூரகன், பத்திரசேனன், பாற்கரன், மித்திரன், காளகண்டன், சண்டதருமன் முதலியோர் வழிபட்ட தலம்  அகத்தியருக்கு இறைவன் திருமணக்காட்சி நல்கிய தலம்; சப்த ரிஷிகளுக்கும் இறைவன் மூல லிங்கத்திலிருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்தத் தலம். சாலிசுக மன்னனுக்குத் திருமணக் கோலம் காட்டும் பஞ்சக்குரோச யாத்திரையாகிய சப்தஸ்தான விழா நடைபெறும் தலமாகவும் இத்தலம் விளங்குகின்றது. 

         வருடா அதிபத்தர் என்பவர் மீனவர், சிவபக்தர்.  இவர் தினமும்  கடலில்  மீன்  பிடிக்கும் போது  கிடைக்கும் முதல் மீனை கடலில் வீசி சிவனுக்கு அர்ப்பணம் செய்து விடுவார். இவரை  சோதிக்க விரும்பிய சிவன் இவருக்கு ஒருநாள் ஒரு மீன் மட்டும் கிடைக்க செய்ய  அதையும் அவர் கடலுக்கு வீசிவிடுவார் .  ஏழ்மையான அதிபத்தருக்கு  ஒரு நாள் ஒரு தங்க மீன் மட்டும் கிடைக்கும். சக மீனவர்கள் அதை கடலுக்குள் போட  வேண்டாம் என்று கூறியும் பக்தி மேலிட   அதையும் கடலுக்குள் வீசி  விடுவார். பக்தியை மெச்சிய சிவன் அம்பிகையுடன் காட்சி  முக்தி அளிப்பார்.   இவர்  அதிபத்த  நாயனார் என்று  அழைக்க  பட்டார் . இவருக்கு இந்த கோயிலில் தனின் சன்னதின் உள்ளது. வருடா வருடம் நடைபெறும் இவரது குருபூஜையின்  போது உற்சவராக அதிபத்தர் ஒரு  கட்டுமரத்தில்  ஏறி  மீன்பிடிக்க செல்வார்.  அப்போது மீனவர்கள்  இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து கடற்கரையில் எழுந்து அருளும் சிவனுக்கு படைப்பார்கள்.  இங்கிருந்து பக்கத்தில்  உள்ள வடக்குப் பொய்கைநல்லூரில்  சித்தர்  கோரக்கர்  சமாதி உள்ளது. 

தேவாரம்:   

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்மூன்றும்
ஆரார் அழலூட்டி அடியார்க் கருள்செய்தான்
தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த
காரார் கடல்நாகைக் காரோ ணத்தானே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

நாகப்பட்டினம் நகரத்திலேயே இக்கோயில்  உள்ளது.  

தங்கும் வசதி:

நாகையில் ஏராளமான தாங்கும் விடுதிகள் உள்ளன. 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 5.00 – 9.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்  611001.

தொலைபேசி:

நாகநாத  குருக்கள்: 9894501319,  04365 – 242844

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...