அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்

இறைவன்: நவநீதேஸ்வரர், வெண்ணைநாதர் 
இறைவி: சத்யதாட்சி, வேல்நெடுங்கண்ணி 
தீர்த்தம்: தேனு தீர்த்தம், பாற்குளம் 
பாடியோர்: சம்பந்தர்

கோயிலின் சிறப்புகள்:

         தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 83 வது ஆலயம்.  தேவலோகத்துப் பசுவான காமதேனு தன் சாபம் நீங்க, வசிஷ்டரின் ஆசிரமம் அமைந்திருந்த மல்லிகை வனம் என்னும் சிக்கல் தலத்திற்கு வந்து, மேற்குப் பக்கம் உள்ள தீர்த்தத்தில் தன் பாவம் தீர வேண்டுமென நினைத்து நீராடியது. காமதேனு முழுகி எழுந்த போது அதனுள் இருந்த ஆத்ம சக்தி பெருகி குளம் முழுக்கப் பாலாக மாறியது. அந்த குளமே இன்று “தேனு தீர்த்தம்’ எனவும் வழங்கப்படுகிறது அங்கு வந்த வசிஷ்ட முனிவர் பால் குளத்தைப் பார்த்து அதில் இருந்து வெண்ணெயைத் திரட்டி எடுத்து சிவலிங்கமாக்கி அதற்கு பூஜை செய்தார். பூஜையை முடித்தபின் அந்த சிவலிங்கத்தை மாற்று இடத்தில் சேர்க்க எண்ணி அதை எடுக்க முயன்றார். அது எடுக்க இயலாமல் அந்த வெண்ணெய் லிங்கம் அவர் கையில் சிக்கிக் கொண்டது. அதனாலேயே இத்தலம் சிக்கல் என்றும் காமதேனு நீராடிய தீர்த்தம் பாற்குளம் என்றும் விளங்குகிறது. இறைவன் வெண்ணெய்யப்பர், நவநீதேஸ்வரர் எனவும் வழங்கப்பெறுகிறார். அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றான இத்தலத்தை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார். கோச்செங்கட் சோழன்பிரசித்தி கட்டிய 72 மாடக்கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

         சிக்கல் ஆலயத்தில் முருகப்பெருமான் சிக்கல் சிங்காரவேலராக வள்ளி, தெய்வானையுடன் தனி சந்நிதியில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கிறார். அம்பாளுக்கு நெடுங்கண்ணி என்பது பெயராகும். அம்பாளுக்கு வேல் நெடுங்கண்ணி என பெயர் மாறியதற்கு ஒரு வரலாறு உண்டு: சூரபத்மன் முதலான பலம் மிக்க அசுரர்களை அழிக்க, அதிக சக்தி கொண்ட ஆறுமுகனை அவதரிக்க செய்தார் முருகப்பெருமான் சூரனை அழிக்க திருச்செந்தூரில் பாடி வீட்டிலேயே பஞ்ச லிங்கங்களை நிறுவி, அர்ச்சனை செய்து சிரத்தையுடன் வழிபட்டார். சிவபெருமான் நேரில் தோன்றி, “போரில் வெற்றி உனக்கே சித்திக்கும்’ என வரம் தந்ததோடு, “உன் அன்னை நீ வெற்றி பெற வேண்டுமென மல்லிகை வனத்தில் தவம் இருக்கிறார். ஆதலால் அங்கு சென்று வேண்டி நீ சக்தியைப் பெற்றுச் செல்’ என ஆசி வழங்கினார். அதன்படி, முருகப்பெருமான் மல்லிகை வனம் சென்று தாயான சக்தி தேவியிடம் சூரனை வதம் செய்வதற்காக அனுமதி கேட்டார். சக்தியும் தன் தவ வலிமையால் வேல் ஒன்று உருவாக்கி அதனை இத்தலத்தில் சிங்காரவேலவருக்கு வழங்கினார். அந்த வேலைக் கொண்டு சூரனை வதைத்து அவனை மயில் வாகனமாகவும், சேவல் கொடியாகவும் ஆக்கிக் கொண்டார் செந்தூர் குமரன். குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் “வேல்நெடுங்கண்ணி அம்மன்’ என்னும் திருநாமம் பெற்றார். திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் நிகழ்ந்தாலும் அது நடக்க வித்தாக உருவானது சிக்கலில் தான். மேலும் “சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சம்ஹாரம்’ என்ற சொல் வழக்கும் உண்டு. இத்தலத்தில் நடைபெறும் சஷ்டித் திருவிழாவின்போது, வேல்வாங்கும் விழாவில் தாயிடம் வேல் வாங்கிக் கொண்டு முருகப் பெருமான் தன் சந்நிதியில் வந்து அமர்வார். பின்னர், சக்தி வேலின் வீரியத்தின் காரணமாக, சிங்காரவேலருக்கு வியர்வை வெள்ளமாய்ப் பெருகும் காட்சியை இன்றளவும் காணலாம். பட்டுத் துணியால் துடைக்கத் துடைக்க முத்து முத்தாக வியர்வை பெருக்கெடுக்கும் அற்புதக்காட்சி, காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

         மகாபலி சக்கரவர்த்தியிடம் 3 அடி மண் தானமாகப் பெற திருமால் வாமன அவதாரம் எடுத்த போது இத்தலம் வந்து நவநீதேஸ்வரரை வழிபட்டு மகாபலியை அழிக்கும் ஆற்றல் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இத்தலப் பெருமாள் “கோல வாமனப்பெருமாள்’ என்ற திருநாமத்துடன் தனி சந்நிதியில் அருளுகின்றார். 

தேவாரம்:   

வானு லாவுமதி வந்துல வும்மதின் மாளிகை
தேனு லாவுமலர்ச் சோலைமல் குந்திகழ் சிக்கலுள்
வேனல்வேளைவிழித்திட்டவெண்ணெய்ப்பெரு மானடி
ஞான மாகநினை வார்வினை யாயின நையுமே

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 5.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. இரண்டு ஊர்களிலிருந்தும் ஏராளமான  பேருந்துகள் உள்ளன. 

தங்கும் வசதி:

நாகையில்  தங்கி அங்கிருந்து செல்லலாம். 

கோயில் திறந்திருக்கும் நேரம்:

காலை 5.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00

கோயிலின் முகவரி:

அருள்மிகு  நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல், நாகப்பட்டினம் மாவட்டம் 611108.

தொலைபேசி:

பி. சேனாபதி  குருக்கள்:  04365 – 246452, 245350

இந்த பதிவை பகிர:

விரைவு இணைப்புகள்(Quick Links)

தொடர்புடைய பதிவுகள்

அருள்மிகு  வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர்

இறைவன்: வாய்மூர்நாதர்     இறைவி: பாலின் நன்மொழியாள்  தீர்த்தம்: சூரிய தீர்த்தம்   பாடியோர்: அப்பர், சம்பந்தர் கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 124 வது ஆலயம்.  விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் 7ல் ஒன்று. இவர் நீலவிடங்கர்,...

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில், வலிவலம்

இறைவன்: மனத்துணைநாதர்     இறைவி: மாழையொண்கண்ணி தீர்த்தம்: காரணர்கங்கை  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 121 வது ஆலயம். இது வலியன் பூசித்த தலமாதலின் இப்பெயர்பெற்றது. வலியன் என்பது...

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை

இறைவன்: பிரம்மபுரீஸ்வரர்      இறைவி: வண்டமர்பூங்குழலி  தீர்த்தம்: சந்திர நதி, பிரம்ம தீர்த்தம்  பாடியோர்: அப்பர், சம்பந்தர், சுந்தரர்  கோயிலின் சிறப்புகள்:          தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 123 வது ஆலயம்.  ஆதியில் பிரமன் சிருஷ்டி தொழிலைப்...