கோயிலின் சிறப்புகள்:
துர்வாச முனிவரின் சாபத்தால் புலியாக மாறித் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் இதுவேயாகும். இதைக்குறிக்கும் விதமாக இத்தலம் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருவி பெரம்பலூர் என்றானது. வியாக்ரமரை புலியாக சபித்த துர்வாசர் பீமனின் கதையால் சாப விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். வியாக்ரமரும் அந்த நாளை எதிர்நோக்கி புலியாக சுற்றித் திரிந்தார். கௌரவர்களின் சதியால் நாட்டை இழந்த பாண்டவர்கள் இந்த புலி இருந்த கானகம் வழியே வந்தனர். அப்போது அவர்களை குறுக்கிட்ட ஒரு முனிவர் பாண்டவர்களின் குறைகள் தீர வாசுதேவனான பெருமாளை வேண்டுமாறு பணித்தார். அவர்களும் பூஜை செய்தனர். ஒரு நாள் பூஜைக்கு தண்ணீர் எடுக்க ஆற்றங்கரைக்கு வந்த பீமனை புலி வடிவில் இருந்த வியாக்ரமர் துரத்தினார். பீமன் தன் கதையால் புலியை அடித்தான். முனிவர் சாப விமோசனம் பெற்றார். அனைவரும் பெருமாளை வேண்டினர். இவர்களது வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெருமாள் இவர்கள் முன் தோன்றி வேண்டும் வரம் கேட்கப் பணித்தார். உள்ளம் மகிழ்ந்த பாண்டவர்கள் வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும். எங்களுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான காரணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனதுதான். எனவே இங்கே வந்து உங்களை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என்று வேண்டினர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள் மதனகோபால சுவாமி என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார். இத்தலத்தில் உள்ள அனுமன் சந்நிதியின் மேல் அவரது அப்பாவான வாயுவின் வாகனமான மான் இருப்பது சிறப்பாகும்.
பலன்கள்:
இத்தலத்து இறைவனை தரிசித்தாலே போதும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறவுகளிடையே ஒற்றுமை ஏற்படும். இல்லத்தில் இனிமை நிறையும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
பெரம்பலூர் நகர்ப் பகுதியில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது இக்கோயில்.
தங்கும் வசதி:
பெரம்பலூரில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு மதனகோபாலசுவாமி திருக்கோயில்,
பெருமாள் கோயில் தெரு. பெரம்பலூர் – 621212
தொலைபேசி:
97906 31103