இறைவன்: | மயூரநாதர் |
இறைவி: | அபயாம்பிகை |
தீர்த்தம்: | அகத்திய தீர்த்தம், காவிரி |
பாடியோர்: | திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை ஆலயங்களில் 39 வதுஆலயம். இந்த ஊரில் தங்கி மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம் மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் உள்ள சிவ வைஷ்ணவ ஆலயங்களை தரிசிக்கலாம். அம்மை மயில் உருக்கொண்டு இறைவனை வழிபட்ட தலம். இங்கு அம்மையின் வேண்டுகோளுக்காக இறைவன் மயில் உருக் கொண்டு தாண்டவமாடினார். இதற்குக் கௌரீதாண்டவம் என்று பெயர். தலம். நடராஜப்பெருமான் கௌரி தாண்டவ கோலத்தில் நடனமாடி அருள் தருகின்றார். பிரகாரத்தில் அம்மை மயில் வடிவில் சிவலிங்கத்தை பூஜை செய்யும் சன்னதி உள்ளது.
இங்குள்ள முருகப்பெருமான் சிவனிடம் வேல் வாங்குகிறார். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற முருக பெருமான். தக்ஷிணாமூர்த்தியின் சிற்பத்தில் உள்ள ஆலமரத்தில் இரண்டு மயில் மற்றும் குரங்குகள் உள்ளது, நவகிரஹத்தில் உள்ள சனிபகவான் தலையில் அக்னியுடன் ஜூவால சனியாக அருள் புரிகிறார். துர்க்கை அம்மனின் காலுக்கு கிழே மஹிஷனும் அருகில் இருபுறமும் அசுரர்களும் இருக்கிறார்கள். இத்தலத்தில் ஐக்கியமான குதம்பை சித்தருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோயில் திருவாடுதுறை ஆதின கோயிலாகும். தருமை ஆதீனத்திற்கு குமரக்கட்டளை முருகன் கோயில் உள்ளது.
மயிலாடுதுறை கடைமுழுக்கு:
ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பென்றால் ஐப்பசி மாதத்தினை துலா விஷூ புண்ணிய காலமாக சொல்கிறார்கள். இந்த துலா விஷூ புண்ணிய காலத்தில் தேவர்களின் இரவும் பகலும் சரிசமமாக இருப்பதால் இந்த நாள்களை புனிதமாகக் கருதி காவிரி ஆற்றில் புனித ஸ்நானம் செய்ய சொல்கிறது நம் சனாதன தர்மம். கங்கை முதலான நதிகள் அனைத்தும் “உலகிலுள்ள அனைவரும் எங்களைப் போன்ற நதிகளில் நீராடி தம் பாவங்களை போக்கிக் கொள்கின்றனர். அதனால் எங்களின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள இந்தச் சுமையை எப்படி போக்குவது?’ என சிவனிடம் வேண்டினர். “துலா மாதத்தில் நீங்கள் அனைவரும் காவிரியில் நீராடுங்கள். அப்போது உங்கள் சுமை நீங்கிவிடும்’ என்றார். அதனால் இந்த மாதத்தில் மட்டும் அனைத்து நதிகளும் இங்கு வருவதால் நாம் காவிரியில் ஸ்நானம் செய்வதால் அனைத்து நதிகளிலும் ஸ்நானம் செய்த பலன் கிட்டும். இந்த துலா ஸ்நானம் என்பது மயிலாடுதுறையில் காவிரி நதியில் துலாகட்டம் என்ற படித்துறையில் ஒவ்வொரு வருடமும் மயூரநாதஸ்வாமி எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். வள்ளலார் கோயில். திருஇந்தளூர் பரிமளரெங்கநாதஸ்வாமி ஆகிய தெய்வங்களும் எழுந்தருளுகிறார்கள் . தமிழ் ஐப்பசி மாதத்தின் முதல் நாள் துலா ஸ்நானம் ஆரம்பமாகிறது. கடை முழுக்கு, ஐப்பசி மாதக் கடைசி நாள் முடிகிறது.
ஓர் அங்கஹீனன் (முடவன்) மயிலாடுதுறையை (அப்போதைய மாயவரம்) நோக்கி இங்குள்ள காவிரியில் துலா ஸ்நானம் செய்ய வந்தான். அதற்குள் ஐப்பசி மாதம் முடிந்துவிட்டது. அந்த முடவன் இறையனார் சிவனிடம் வேண்டினான். அவனுடைய குறையைப் போக்க, “கார்த்திகை 1ஆம் தேதி அன்றும் இதே பலன் உனக்கு கிட்டும் ஸ்நானம் செய்’ என அருளினார். இந்த நாளே முடவன் முழுக்கு என பெயர் பெற்றது. இத்துடன் மொத்தம் 14 உலகங்களிலுமுள்ள அறுபத்தி ஆறாயிரம் கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஸ்ரீ கிருஷணனின் ஆணைக்கிணங்க, இந்த துலா மாதத்தில் காவிரியில் நீராட இந்த மாதம் முழுவதிலும் இங்கே இருக்கிறார்கள் என்று அக்னி புராணம் கூறுகிறது. மிக முக்கியமாக, மக மாதத்தில் ப்ரயாகையிலும் (அலஹாபாத்), அர்த்தோதய புண்ணியகாலத்தில் சேதுவிலும் நீராடினால் கிடைக்கும் பலனைவிட இந்த துலா மாதத்தில் காவிரியில் ஸ்நானம் செய்வதால் மனிதன் செய்யும் பெறும் தவறுகளும் நீங்கப்பெறுகின்றன. இப்படிப்பட்ட புண்ணியமான நாள்களில், நாமும் ஒரு நாளில் இந்த துலா ஸ்நானம் செய்து அகத்தூய்மை மற்றும் புறத்தூய்மை பெறுவோம்.
தேவாரம்:
கரவின் றிநன்மா மலர்கொண்டு
இரவும் பகலுந் தொழுவார்கள்
சிரமொன் றியசெஞ் சடையான்வாழ்
வரமா மயிலா டுதுறையே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறை நகரத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5.30 – 12.00 மற்றும் மாலை 4.00 – 9.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில், மயிலாடுதுறை 609001.
தொலைபேசி:
04364 223779, 222345,9345149412