இறைவன்: | சோமநாதர் |
இறைவி: | வேயிறுதோளியம்மை |
தீர்த்தம்: | சந்திர புஷ்கரணி, இந்திர தீர்த்தம் |
பாடியோர்: | அப்பர், சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை ஆலயங்களில் 21 வதுஆலயம்.
எப்பொழுதும் அழிவில்லாது நீடித்துயிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர். இந்திரன், சூரியன், சந்திரன், காளி, நண்டு உருவு எய்திய தன்மசுதன், இவர்கள் வழிபட்டுப் பேறுபெற்றதலம். முனை யடுவார் நாயனார் திருவதாரஞ் செய்தருளியது இவ்வூரில் தான்.
தன்மசுதன் என்னும் அசுரன் முன்வினை பயனால் நண்டாக பிறந்தான். அவன் தன் பாவம் நீங்க நாரதரிடம் ஆலோசனை கேட்க அவர் இத்தல இறைவனை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும் கூற அதன்படி இங்கு வந்து காவேரியில் நீராடி தன்னை வழிபட்டவனுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்தார். அவன் தனக்குள் ஐக்கியமாவதற்கு ஏதுவாக லிங்கங்கத்தில் துளை ஏற்படுத்தி கொடுக்க அவனும் சிவலிங்கத்தில் ஐக்கியமானன். நண்டு சென்ற துளை தற்போதும் உள்ளது.
திருநள்ளார் திருத்தலம் போன்று அம்பாளுக்கு நேரே நின்று சனிபகவானை வழிபடலாம். வாஸ்துப்படி அம்மனுக்கு எதிரே நின்று வழிபட்டால் சனி விலகி நிற்கும். சிவனை வழிபட்ட பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வெளியே தனி சன்னதியில் இருக்கிறார்.
இத்தலத்தில் பெரியவராக சிந்தாமணிபிள்ளையார், பழையவராக செல்வமகா விநாயகர், புனிதமானவராக சிவானந்த விநாயகர் என்று 3 நிலைகளில் உள்ளார் புதிய செயல் தொடங்குபவர்கள் இவரை வேண்டி வணங்குகிறார்கள்.
இந்த ஊர் கார்காத்த வெள்ளாளர் குடும்பங்கள் நிறைந்ததாக இருந்தது. பல வருடங்கள் முன்பாக திருமலையப்பபிள்ளை என்ற மந்திரி அந்த குடும்பங்களை திருநெல்வேலி அழைத்து சென்று மணியமாக பணி அமர்த்தி விட்டார்கள். இன்றும் இவர்களை பிள்ளையன் குடும்பம் என்று அழைக்கிறார்கள்.
தேவாரம்:
ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை
ஒண்ணு தற்றனிக் கண்ணுத லானைக்
கார தார்கறை மாமிடற் றானைக்
கருத லார்புரம் மூன்றெரித் தானை
நீரில் வாளைவ ரால்குதி கொள்ளும்
நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்
பாரு ளார்பர வித்தொழ நின்ற
பரம னைப்பணி யாவிட லாமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 5.கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
மயிலாடுதுறையில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 – 10.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சோமநாதர் திருக்கோயில், நீடூர், மயிலாடுதுறை மாவட்டம் 609203.
தொலைபேசி:
என் .கல்யாணசுந்தரசிவன் குருக்கள் 04364 250142, 250424, 99436 68084