கோயிலின் சிறப்புகள்:
தஞ்சையை ஆண்ட சோழ மன்னர் தஞ்சையை சுற்றி எட்டு திசைகளிலும் காவல் தெய்வங்களாக அஷ்ட சக்திகளை அமைத்திருந்தார். அதில் தஞ்சைக்கு கிழக்கே அமைந்திருக்கும் சக்திதான் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன். முற்காலத்தில் இவ்விடம் புன்னை மரங்களால் சூழ்ந்திருந்ததால் புன்னைநல்லூர் என்று பெயர் பெற்றது. கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனவர். புற்று உருவாய் இருந்த அம்மனை சதாசிவ பிரம்மேந்திர சுவாமிகள் மாரியம்மனாய் வடிவமைத்து சக்ர பிரதிஷ்டையும் செய்தார். புற்று மண்ணால் ஆனவர் என்பதால் அம்மனுக்கு நித்ய அபிஷேகம் நடத்தாமல் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் தைலாபிஷேகம் ஒரு மண்டலத்திற்கு நடந்து வருகிறது. அந்த ஒரு மண்டல காலமும் அம்மனின் உக்கிரம் அதிகமாகும் என்பதால் அம்மனின் உக்ரத்தை தனிக்க தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. முத்துமாரியம்மன் என்ற பெயர் காரணத்துக்கு ஏற்ப கோடை காலத்தில் அம்மனின் மேனியில் முத்து முத்தாக வியர்த்திருக்கும். இத்தலத்தில் உள்ள பேச்சியம்மனை வழிபட்டால் குழந்தைகளின் பயத்தை நீக்குவார் என்பது நம்பிக்கை.
பரிகாரம்:
அம்மை நோய்வாய்ப்பட்டவர்கள் இத்தலத்தில் வந்து ஒரு வாரம்
தங்கி அம்மனுக்கு நெய்வேத்யம் செய்யப்படும் பாலை குடித்தால் நோய் விலகும் என்பது
ஐதீகம்.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இத்தலம் தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 6KM தொலைவில் உள்ளது. தஞ்சையிலிருந்து நகர பேருந்துகள் மூலம் செல்லலாம். சென்னையிலிருந்து தஞ்சைக்கு சோழன் விரைவு ரயில், உழவன் விரைவு ரயில் போன்ற ரயில்கள் உள்ளன.
தங்கும் வசதி:
தஞ்சையில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு மாரியம்மன் கோயில்
புன்னைநல்லூர்,
தஞ்சாவூர் – 613501
தொலைபேசி:
04362-267740, 223384