கோயிலின் சிறப்புகள்:
இது ஒரு தேவாரப் பாடல் பெற்ற கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்புரிகிறார். தட்சன் யாகம் நடத்திய போது சிவனின் அனுமதியின்றி சூரியன் யாகத்தில் கலந்து கொண்டார். அதனால் அகோர வீரபத்திரரால் சூரியன் தண்டிக்கப்பட்டார். தோஷமும் ஏற்பட்டது. சூரியன் தன் தோஷம் போக்க 16 சிவத்தலங்கள் சென்று வழிபாடு செய்தார். அதில் இக்கோயிலும் ஒன்றாகும். சூரியபகவான் ஆண்டுதோறும் பங்குனி 18,19,20 தேதிகளில் தன் கதிர்களை வீசி சூரிய பூஜை செய்கிறார். சிவன் எதிரில் சூரியபகவான் நின்று சிவதரிசனம் செய்யும் கோலம் வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். இக்கோயிலில் மூன்று சண்டிகேஸ்வரர்கள் இருப்பதும், சிவனுக்கு பின்புறம் பெருமாளும் ஆஞ்சநேயரும் அருகருகில் இருப்பதும் சிறப்பாகும். மார்க்கண்டேயன் இங்கு அரூப வடிவில் தினமும் சிவபூஜை செய்வதாக ஐதீகம். பங்குனி உத்திரத் திருவிழா இத்தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகிறது. பங்குனி உத்திரத் திருவிழாவாம் இன்று இத்தல இறைவனை வழிபட்டு அனைவரும் இறையருள் பெறுவீர்.
பலன்கள்:
இத்தலத்தில் சூரியனுக்கு தோஷம் நிவர்த்தி ஆனதால், இது பிதுர் தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஜாதகரீதியாக எந்த கிரகத்தினாலும் பிதுர் தோஷம் ஏற்பட்டாலும் இத்தலத்தில் பரிகாரம் செய்யலாம். மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம லக்னம், சிம்மராசியில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதங்களில் பிறந்தவர்கள், தமிழ் மாதத்தின் முதல் தேதியில் பிறந்தவர்கள் ஆகியோர் தமிழ் மாத வளர்பிறையில் வரும் முதல் ஞாயிற்று கிழமையில் சிவனையும் சூரியனையும் வழிபட்டால் அவர்களுக்குள்ள தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
தஞ்சாவூர் பட்டுக்கோட்டை சாலை மார்கத்தில் தஞ்சையிலிருந்து 16 KM தொலைவில் உள்ள உளூரிலிருந்து 2 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன. உளூரிலிருந்து ஆட்டோ வசதியும் உள்ளது.
தங்கும் வசதி:
அருகிலுள்ள தஞ்சாவூரில் தங்கி அங்கிருந்து செல்லலாம். தஞ்சையில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு பரிதியப்பர் கோயில்,
பரிதிநியமம், ஒரத்தநாடு வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 614904.