கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். இக்கோயில் உள்ள குன்றில் பெருமாள் பக்தர் ஒருவர் தினமும் மாடு மேய்ப்பது வழக்கம். ஒருசமயம் பசு மேய்த்துவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது ஒரு பசு மட்டும் இல்லாதைக் கண்டார். எனவே, பசுவைத்தேடி குன்றுக்கு வந்தார். ஓரிடத்தில் அந்த பசு நின்றிருக்க, அதன் மடியில் சிறுவன் ஒருவன் பால் பருகிக் கொண்டிருந்ததைக் கண்டார். குட்டி போடாத பசுவிடம் சிறுவன் பால்குடிப்பதைக் கண்டு ஆச்சர்யபட்ட அவர் மறைந்து நின்று நடப்பதை கவனித்தார். அப்போது சிறுவன் அவரை அழைத்து பெருமாளாக சுயரூபம் காட்டினார். அவரிடம், தான் அந்த குன்றில் இருக்க விரும்புவதாகவும், அங்கு தனக்கு கோயில் எழுப்பும்படியும் உத்தரவிட்டார். அதன்படி, பக்தர் இங்கு அவருக்கு கோயில் எழுப்பினார். பக்தருக்கு ஓடிச் சென்று அருள்புரிந்ததால் இவருக்கு சென்றாயப் பெருமாள் என்கின்ற திருநாமம் வந்தது. சிறுவனாக வந்ததன் அடிப்படையில் பிரதான சன்னதியிலுள்ள சென்றாயப் பெருமாளை, பாலகராகவே வழிபடுகின்றனர். பெருமாளுடன் தாயார்கள் கிடையாது. சிறுவனானாலும் இவர் முறுக்கு மீசை, தாடியுடன் காட்சியளிப்பதும் இரு கைகளை கூப்பி நிற்பதும் சிறப்பாகும். இங்கு கிருஷ்ண ஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலையை இவருக்கு அணிவிப்பது சிறப்பாகும்.
பலன்கள்:
விவசாயம் செழிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாக, திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க சென்றாயப் பெருமாளிடம் வேண்டினால் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
வத்தலகுண்டு தேனி சாலை மார்கத்தில் வத்தலகுண்டுவிலிருந்து 3 KM தொலைவில் இவ்வாலயம் உள்ளது. நகரப் பேருந்துகள் உள்ளன. ஆட்டோவிலும் செல்லலாம்.
தங்கும் வசதி:
வத்தலகுண்டில் தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையும், சனிக்கிழமைகளில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் திறந்திருக்கும்.
கோயில் முகவரி:
அருள்மிகு சென்றாயப்பெருமாள் திருக்கோயில், கோட்டைப்பட்டி, பழைய வத்தலக்குண்டு. திண்டுக்கல் மாவட்டம்.
தொலைபேசி:
98658 26387