இறைவன்: | சிவலோகநாதர், முண்டீஸ்வரர் |
இறைவி: | சௌந்தர்யநாயகி, காணார்க்குழலி |
தீர்த்தம்: | பிரம்ம தீர்த்தம் |
பாடியோர்: | அப்பர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 19 வது ஆலயம். துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்கிற மன்னன் வேட்டைக்கு இங்கு வந்த போது இங்கிருந்த குளத்தில் ஓர் அழகிய தாமரை மலரைக் கண்டான். அதைப் பறிக்க முடியாமல் போகவே தானே சென்று அம்மலரைப் பறிக்க முயன்றான். தாமரை மலர் அவன் கைக்கு அகப்படாமல் குளத்தில் சுற்றி வர, கோபம் கொண்ட மன்னன் அம்மலர் மீது குறி வைத்து அம்பு விட்டான். மலர் மீது அம்பு பட்டவுடன் குளத்து நீர் முழுவதும் செந்நீராயிற்று. அதைக் கண்டு பயந்த மன்னன் அருகில் சென்று பார்த்த போது தாமரை மலரில் ஒரு லிங்கம் இருக்கக் கண்டான். அந்த லிங்கத்தை எடுத்து குளக்கரையில், அதை ஸ்தாபித்து ஒரு கோவிலும் கட்டினான். லிங்கத்தின் மீது அம்பு தைத்த தழும்பு இன்றும் இத்தல மூலவரின் முடியில் காணலாம். இதனால் சுவாமி முடீசுவரர் என்றும் சிவனின் வாயில் காப்பனாகிய முண்டி பூஜித்தமையால் முண்டீசுவரர் என்றும் அழைக்கப் படுகிறார். தட்சிணாமூர்த்தி நந்தியின் மேல் அமர்ந்து காட்சி தருகிறார். மேதா தட்சிணாமூர்த்தி. பிரம்மன் மற்றும் இந்திரன் வழிபட்ட தலம். வீரபாண்டியன் என்ற மன்னனுக்கு விபுதி பை இறைவன் தந்த தலம்.
நடனத்திலும் இசையிலும் ஈடுபாடு உள்ளவர்கள் வழிபட்டால் நல்ல ஞானம் உண்டாகும்.
திருநாவுக்கரசரால் உழவாரப் பணி செய்யப்பட்ட ஆலயங்களில் இதுவும் ஒன்று. அம்பாள் சௌந்தர்ய நாயகி நின்ற கோலத்தில் தனி சந்நிதியில் அருள் மழை பொழிகிறாள். ஆலயத்தின் வெளியே பிரம்ம தீர்த்தம் எனப்படும் முண்டக தீர்த்தம் உள்ளது.
தேவாரம்:
ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
அடியவர்கட்கன்பன் காண் ஆனைத் தோலைப்
போர்த்தான் காண் புரிசடைமேற்புனலேற்றான் காண்
புறங்காட்டிலாடல் புரிந்தான்றான் காண்
காத்தான் காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
கனை கடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே
சேர்த்தான் காண் திருமுண்டீச் சரத்து மேய
சிவலோகன் காணவனென் சிந்தை யானே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விழுப்புரத்திலிருந்து அரசூர் வழியாக திருவெண்ணெய் நல்லூர் செல்லும் வழியில் 13 கி.மீ.தொலைவில் இக்கோயில் உள்ளது. விழுப்புரம், பன்ருட்டி, திருக்கோயிலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 10.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு சிவலோகநாதர் திருகோயில், கிராமம் (திருமுண்டீச்சரம்). உளுந்தூர்பேட்டை வட்டம், விழுப்புரம் மாவட்டம் 607203.
தொலைபேசி:
கண்ணன் குருக்கள், 04146 – 206700, 98946 97861, 99420 56781