இறைவன்: | கிருபாபுரீஸ்வரர், தடுத்தாட்கொண்டநாதர் |
இறைவி: | வேற்கண்ணியம்மை, மங்களாம்பிகை |
தீர்த்தம்: | தென்பெண்ணையாறு |
பாடியோர்: | சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற நடு நாட்டு ஆலயங்களில் 14 வது ஆலயம். இறைவன் நஞ்சுண்ட பொழுது அந்த நஞ்சு அவரை தாக்காமலிருக்க உமையம்மை பசு வெண்ணையால் கோட்டை கட்டி பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவில் தவம் செய்த காரணத்தால் இத்தலம் திருவெண்ணெய்நல்லூர் என பெயர் வந்தது. இறைவன் சுந்தரரை தடுதாட்கொண்ட தலம். சுந்தரரை திருமண சமயத்தில் முதியவராக வந்து ஓலையை கட்டி சுந்தரர் தனக்கு அடிமை என்று ஊராரிடம் நிரூபித்து அவர்களும் சுந்தரரை உடன் செல்ல ஆணை இட்டனர். சுந்தரரும் பித்தா, கிறுக்கா என்று திட்டி அவருடன் சென்றார். முதியவர் சுந்தரரை கோயிலுக்கு உள்ளே அழைத்து சென்று மறைந்து விட்டார். வந்தது இறைவன் என்று உணர்ந்து வணங்கி நின்றார். இறைவன் பதிகம் பாட சொல்ல என்ன பாடுவேன் என்று கேட்க என்னை பித்தா என்று அழைத்தாயே அதையே முதலாக வைத்து பாடு என்று கூற சுந்தரரும் பித்தா பிறைசூடி என்ற பதிகத்தை பாடினார். இறைவன் சுந்தரரை தோழனாக ஏற்று கொண்டார். இதன் பிறகு பலதலங்களுக்கு சென்று பதிகம் பாடினார். சுந்தரருக்கும் இறைவனுக்கும் பெரியோர்களால் பஞ்சாயத்து நடந்த மண்டபம் இன்றும் உள்ளது. முதியவராக வந்த இறைவன் லிங்கத்தில் ஐக்கியமாகும் முன் கருவறைக்கும் வெளியே கழற்றி வைத்த காலடி இன்னமும் இங்கு பாதுகாப்பாக உள்ளது. அம்மன் ஸ்ரீசக்கரத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
அருணகிரிநாதர் முருகன் மயில் மீது நடனம் புரிதலைக் பார்த்து திருப்புகழ் ஒன்று பாடியுள்ளார். இங்கு விநாயகர் சுயம்பு பெயர் பொல்லாப் பிள்ளையார். ஐந்து வயதில் மெய்கண்ட தேவருக்கு ஞான உபதேசம் செய்தவர். சடையப்ப வள்ளலும் இங்கு வாழ்ந்து உள்ளார். மெய்கண்டண்டதேவருக்கு இங்கு தனி கோயில் உண்டு. திருவாடுதுறை ஆதீனத்தின் கோயில். இந்த ஆலயத்தை வழிபட்டால் மனநிம்மதி, நாக்குவன்மை, கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவது போன்ற பயன்கள் கிடைக்கும்.
தேவாரம்:
பித்தாபிறை சூடி பெருமானே அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூரருட்டுறையுள்
அத்தா உனக்காளாயினி அல்லேன் எனலாமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
விழுப்புரத்திலிருந்து 19 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. விழுப்புரத்திலிருந்தும், பன்ருட்டியிலிருந்தும், திருக்கோயிலூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
தங்கும் வசதி:
விழுப்புரத்தில் தங்கி அங்கிருந்து செல்லலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 11.00 மற்றும் மாலை 5.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் தேவஸ்தானம், திருவெண்ணெய்நல்லூர் (அஞ்சல்), திருகோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம் 607203.
தொலைபேசி:
T.R.S. அர்த்தநாரீஸ்வரர், 04153 – 234548, ரவி – 9994270882, அம்பலவான தம்பிரான் (மெய்கண்டதேவர் கோயில்) – 9442422197