இறைவன்: | தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் |
இறைவி: | அமிர்தவல்லி, கிருபாநாயகி |
தீர்த்தம்: | சடாகங்கை |
பாடியோர்: | சுந்தரர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 9 வது ஆலயம். கயிலை மலையில் சிவன் பார்வதி கல்யாணம் நடைபெறும் சமயம் தேவர்கள் எல்லோரும் அங்கு கூடியதால் பாரம் அதிகரித்து வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதனை சமன் செய்ய அகத்திய முனிவரை தென் திசை நோக்கிச் செல்லும் படி சிவபெருமான் பணித்தார். அதன்படி தென்திசை வந்த அகத்தியர் இத்தலத்தில் ஒரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட ஈசன் தாலபுரீஸ்வரர் என்ற பெயரில் இஙகு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இச்சந்நிதி துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் அகத்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
அகத்திய முனிவரின் சீடரான புலத்தியர் இத்தலம் வந்தபோது தாலபுரீஸ்வரருக்கு அருகில் மற்றொரு சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார். இந்த மூலவர் கிருபாநாதேஸ்வரர் என்று போற்றப்படுகிறார். கிருபாநாதேஸ்வரர் சந்நிதியிலும் துவார வாயிலின் முன்னால் ஒரு புறம் புலஸ்தியர் உருவமும் மறுபுறம் பனைமரமும் கல்லில் உள்ளன. கிருபாநாதேசுவரரின் கருவறையில் கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். சண்டேசுவரர் தனி விமானத்துடன் உள்ளார். கிருபாநாதேசுவரர் கருவறையில் உள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி அமைப்பு அற்புதமானது. வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலை மேலே உயர்த்திக் குத்துக்காலிட்டு, சின்முத்திரை பாவத்தில் அபயகரத்துடன் வரதகரமும் கூடி அற்புதமாகக் காட்சி தருகின்றார். அகத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட தாலபுரீஸ்வர் என்கிற பனங்காட்டீசரரை முதலில் வணங்கி பிறகு தான் புலத்தியர் ஸ்தாபித்து வழிபட்ட கிருபாநாதேஸ்வரரை வணங்க வேண்டும். அதுவே இக்கோவிலில் முறை. தேவாரத்தில் குறிப்பிடப்படுவர் பனங்காட்டீசரே ஆவார்.
அகத்தியர் தான் ஸ்தாபித்த ஈசன் தாலபுரீஸ்வரருக்கு பனம்பழம் படைத்து வழிபட்டதால் பனைமரமே தலமரமாக விளங்குகிறது. இதனாலேயே இறைவன் பனங்காட்டீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.. பிரதானத் தல விருட்சமாகிய ஆதி பனை மரங்கள் இரண்டும் கோயிலுக்கு வெளியில் உள்ள கோட்டை முனீஸ்வரர் கோயிலின் பின்புறம் உள்ளன.
இரண்டு சுவாமி சந்நிதிகள் இருப்பதைப் போன்று இரண்டு அம்பிகைள் அமிர்தவல்லி, கிருபாநாயகி என்ற பெயர்களுடன் தனித்தனி சந்நிதிகளில் இவ்வாலயத்தில் வீற்றிருக்கின்றனர். அம்பாள் சந்நிதிகளை வலமாக வரும்போது பைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. இக்கோயிலின் உள் மண்டபத்தில் கற்தூண்களில் மிக அரிய சிற்பங்கள் உள்ளன. அவற்றுள் சில: (1) அமிர்தவல்லி அம்பாள் சந்நிதியின் முன்புள்ள கல்தூணில் நாகலிங்கச் சிற்பம் உள்ளது. (2) உள் வாயிலுக்கு வெளியில் உள்ள ஒரு தூணில் இராமருடைய சிற்பம் உள்ளது. உள்மண்டபத்தில் கிருபாநாதேஸ்வரர் சந்நிதிக்கு முன்புள்ள ஒரு தூணில் வாலி, சுக்ரீவர் போரிடும் சிற்பம் உள்ளது. இராமர் சிற்பத்திடம் நின்று பார்த்தால் வாலி சுக்ரீவ போர்ச்சிற்பம் தெரிகிறது. ஆனால் வாலி சுக்ரீவ சிற்பத்திடம் நின்று பார்த்தால் பார்வைக்கு இராமர் சிற்பம் தெரியவில்லை. அவ்வாறு அருமையாக அமைந்துள்ளது. வாலிக்கு ராமர் தெரிந்தால் ராமரின் பலத்தில் பாதி வாலிக்கு சென்று விடும் ஆதலால் ராமர் மறைந்து வாலியை கொன்றார்.
தேவாரம்:
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா
மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்
சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ.தூரத்தில் இக்கோயில் உள்ளது. காஞ்சியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 7.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம். – 604410.
தொலைபேசி:
என்.தேவராஜ ஷர்மா 9843568742