கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் தாண்டேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். இப்பகுதியை வணிகர்கள் குழுமியிருந்து வியாபாரம் செய்ததால் குழுமூர் என்று அழைக்கப்பட்டு பின்னர் மருவி கொழுமம் என்றானது. இத்தலத்தில் தில்லையில் அமைந்துள்ளது போலவே இடது காலைத் தூக்கியபடி ஆனந்த தாண்டவ கோலத்தில் சுமார் ஐந்தரை அடி உயரத்தில் நடராஜர் காட்சி தருகிறார். எனவே, இத்தலம் தென் சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியை ஆண்ட மன்னர் இங்கு நடராஜரை உற்சவராக வைக்க விரும்பி, அவரை சிலையாக வடித்த போது இரண்டு முறை சரியாக அமையவில்லை. கோபமடைந்த அவர், அடுத்த சிலை சரியாக அமையவில்லை எனில் சிற்பிக்கு மரண தண்டனை கொடுக்கும்படி உத்தரவிட்டார். வருந்திய சிற்பி இறைவனிடம், “மன்னர் கையால் உயிர் போவதை விட நீயே எனது உயிரை எடுத்துக் கொள்!’ என முறையிட்டார். மனமிரங்கிய நடராஜர், அவருக்கு காட்சி தந்து அழகிய அம்சத்துடன் தானாகவே சிலைவடிவில் அமைந்தார். அந்த சிலையே தாண்டேஸ்வரராக இக்கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயில் அமராவதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது சிறப்பாகும்.
பலன்கள்:
திருமணத்தடை, சனி தோஷங்கள் நீங்க, கலைகளில் சிறக்க இத்தலத்தில் உள்ள இறைவனை வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
பழனி உடுமலைபேட்டை சாலையில் உள்ள மடத்துக்குளம் என்னும் ஊரிலிருந்து 12KM தொலைவில் இக்கோயில் உள்ளது. பழனியிலிருந்தும், உடுமலைபேட்டையிலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள பழனியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். பழனியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில், கொழுமம், கோயம்புத்தூர் மாவட்டம்.
தொலைபேசி:
04252 – 278 827