கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் தான்தோன்றீஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். சித்தர்களில் ஒருவரான கொங்கணர், மூலிகைகளை பயன்படுத்தி இரும்பைத் தங்கமாக மாற்றினார். தங்கத்தை ஐநூறு மாற்றுக்களாக தயாரித்த அவர் மேலும் அதிக மாற்று தங்கம் தயாரிக்க வேண்டும் என விரும்பி அதற்கு அருள்தருமாறு சிவபெருமானை வழிபட்டார். அவருக்கு காட்சி தந்த சிவன் இலுப்பை மரங்கள் நிறைந்த இப்பகுதியில் பைரவரை வணங்கி, தங்கத்தை ஆயிரம் மாற்றாக உயர்த்தி தயாரிக்க அருள் செய்தார். அதன்படி கொங்கணர் பைரவரை வழிபட்டு, ஆயிரம் மாற்று தங்கம் தயாரித்தார். அந்த தங்கம் ஜோதி ரூபமாக மின்னியது. அதை அவர் எடுக்க முயன்றபோது, அந்த ஜோதி பூமிக்குள் புதைந்து சிவலிங்கமாக காட்சியளித்தது. பிரகாசமான ஜோதியில் இருந்து தோன்றியதால் சுவாமிக்கு சுயம்பிரகாசேஸ்வரர் என்றும் தான்தோன்றீஸ்வரர் என்றும் பெயர்கள் ஏற்பட்டன. இலுப்பை வனத்தின் மத்தியில் சிவன் காட்சி தந்த தலமென்பதால் இலுப்பைக்குடி என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது. இத்தலத்து பைரவர், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் என்று பெயர் பெறுகிறார். அவரது இடது கையில் கபாலத்துக்கு பதிலாக அட்சய பாத்திரம் இருக்கிறது. ஸ்வர்ணம் தந்தருளியவர் என்பதால் கபாலத்தை அட்சய பாத்திரமாக வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக் கொள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இவர் இரண்டு நாய் வாகனங்களுடன் காட்சி தருவது மற்றுமொரு சிறப்பாகும். சிவன் சன்னதியின் முன்மண்டபத்தில் உள்ள தூணில் ஒரு அங்குல அளவே உள்ள குட்டி விநாயகர் சிற்பம் இருக்கிறது. இந்த சிலையில் கண் இமை, விரல் நகங்களும் துல்லியமாகத் தெரியும்படி நேர்த்தியாக சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும்.
பலன்கள்:
குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருக, திருமண, புத்திர தோஷங்கள் நீங்க இங்கு வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
காரைக்குடியிலிருந்து 6 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. நகரப் பேருந்துகள் உள்ளன. ஆட்டோவிலும் செல்லலாம்.
தங்கும் வசதி:
காரைக்குடியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில், இலுப்பைக்குடி, அரியக்குடி போஸ்ட், சிவகங்கை மாவட்டம் – 630 202.
தொலைபேசி:
04561 – 221 810, 94420 43493