கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் நரசிம்ம பெருமாளாக மடியில் லக்ஷ்மியுடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். முற்காலத்தில் இவ்வூர் புளியமரக் காடாக இருந்தது. வட மொழியில் திந்திருணி என்பது புளியமரத்தை குறிக்கும். திந்திருணி வனம் என்பதே மருவி பின்னாளில் திண்டிவனம் ஆனது. திந்திருணி வனத்தில் இருந்த திண்டி, முண்டி, கிங்கிலி, கிலாலி என்ற அரக்கர்கள் இப்பகுதியில் தவம் செய்து வந்த முனிவர்களை கொடுமைப்படுத்தி வந்தனர். அரக்கர்களிடமிருந்து தங்களை காக்க வேண்டி முனிவர்கள் திருமாலிடம் முறையிட்டனர். இவர்களது வேண்டுதலை ஏற்ற பெருமாள் அரக்கர்களை அழித்து முனிவர்களை காப்பதற்காக தன்னிடமிருந்த சங்கு, சக்கரத்தை அனுமனிடம் கொடுத்து போருக்கு அனுப்பி வைத்தார். அதன்படி அனுமனும் அரக்கர்களை அழித்து முனிவர்களின் வேள்வி தடையின்றி நடைபெற வழிவகுத்தார். இதனால் இத்தலத்தில் உள்ள அனுமன் சங்கு சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இந்த தலத்தில் நரசிம்மர் கோபம் தணிந்து மக்களுக்கு அருள்செய்ய வேண்டுமென தாயாகிய லட்சுமி அவரை வணங்கிய நிலையில் இருக்கிறாள். இதுவே இத்தலத்தின் சிறப்பாகும்.
பலன்கள்:
கடன் தொல்லைகள் நீங்கவும், வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், செவ்வாய் தோஷம் விலகவும், திருமணத்தடைகள் நீங்கவும் திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திரக்காரர்களும், ராகு திசை நடப்பவர்களும், சனிதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இங்குள்ள நரசிம்மரிடம் பிரார்த்தனை செய்து பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திண்டிவனம் நகர்ப் பகுதியிலேயே இக்கோயில் உள்ளது.
தங்கும் வசதி:
திண்டிவனத்தில் தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோயில், திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் – 604 001.
தொலைபேசி:
04147-225 077, 99432 40662