இறைவன்: | மகாகளேஸ்வரர் |
இறைவி: | குயில்மொழியம்மை |
தீர்த்தம்: | மாகாள தீர்த்தம் |
பாடியோர்: | சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 32 வது ஆலயம். இந்தியத் திருநாட்டில் மூன்று சிவஸ்தலங்கள் மாகாளம் என்ற பெயருடன் விளங்குகின்றன. அவை வடநாட்டிலுள்ள உஜ்ஜயனி மாகாளம், காவிரி தென்கரைத் தலமான அம்பர் மாகாளம் மற்றும் தொண்டை நாட்டுத் தலமான இந்த இரும்பை மாகாளம். சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர். அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து, மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் என்னுமிடத்தில் வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள். பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறை, பூந்தோட்டத்திற்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் மேலும் இத்தலம் வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். மாகாளரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இறைவனும் “மகாகாளநாதர்” என்ற பெயர் பெற்றார்.
இங்கு கடுவெளி சித்தர் என்பவர் கடும் தவம் இருந்தார் அப்போது நாட்டில் மழை இல்லாமல் கடும் வறட்சி. இந்த நாட்டை ஆண்ட அரசன் சித்தரின் கடும் தவம்தான் வறட்சிக்கு காரணம் என்று கருதி அவரது தவத்தை கலைக்க ஒரு தேவதாசியை அனுப்பினான். தவம் களைந்து எழுந்த சித்தரிடம் உண்மையை கூறி மன்னிப்பு கேட்டான். சித்தரும் தவத்தை விடுத்து சிவத்தொண்டு செய்து வாழ்ந்து வந்தார். நாட்டில் நல்ல மழை பெய்து வறட்சி நீங்கி மகிழ்ச்சியுடன் இருந்தனர். மக்கள் மகிழ்ச்சியுடன் இறைவனுக்கு விழா எடுத்து சுவாமியை ஊர்வலமாக எடுத்து வரும்போது தவத்தை கலைத்த தேவதாசி மாது நடனமாடிவந்தார் அப்போது கழண்டு விழுந்த கால் சிலம்பை, விழாவில் தடை கூடாது என எண்ணி சித்தர் கால்சிலம்பை அவளது காலில் மாட்டி விட்டார். சித்தரின் இந்த செயலை மக்கள் ஏளனம் செய்தனர். கோபம் கொண்ட சித்தர் சிவனை வேண்டி பாட சிவலிங்கம் மூன்றாக பிளந்தது. அரசன் சித்தரிடம் மன்னிப்பு கேட்க சித்தர் மிண்டும் ஒரு பாட்டு பாட சிவலிங்கம் ஒன்று கூடியது. அரசன் செப்பு தகடு வேய்ந்து சிவலிங்கத்தை ஒன்றாக்கி வழிபட்டான். அன்று முதல் இன்று வரை சிவலிங்கம் செப்பு தகட்டால் இணைக்கப்பட்டு அருள் தருகிறது. நடராஜர் சன்னதியில் நின்று தரிசித்தால் சிவன், பார்வதி மற்றும் நடராஜரை மூவரையும் தரிசிக்கலாம். ஆயுள் வளர இங்கு வேண்டி கொள்கிறார்கள்.
தேவாரம்:
மண்டு கங்கை சடையிற் கரந்தும் மதி சூடி மான்
கொண்டகையாற் புர மூன்றெரித்த குழகன்னிடம்
எண்டிசையும் புகழ்போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டுகீதம் முரல்பொழில் சுலாய் நின்ற மாகாளமே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
புதுச்சேரியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். புதுச்சேரியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 – 12.00 மற்றும் மாலை 4.00 – 8.00
கோயிலின் முகவரி:
அருள்மிகு இரும்பை மகாகாளேஸ்வரர் திருகோயில், இரும்பை அஞ்சல்,ஆரோவில் வழி, விழுப்புரம் மாவட்டம் 605010.
தொலைபேசி:
சுவாமிநாத குருக்கள்: 94434 65502