இறைவன்: | அரசிலிநாதர், அரசலீஸ்வரர் |
இறைவி: | பெரியநாயகி, அழகியநாயகி |
தீர்த்தம்: | வாமன தீர்த்தம் |
பாடியோர்: | சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற தொண்டை நாட்டு ஆலயங்களில் 31 வது ஆலயம். வாம தேவர் எண்ணும் முனிவர் தன்னுடைய சாபம் நீங்க பல தலங்களுக்கும் சென்று சிவனை தரிசித்து வந்தார். இந்த ஊருக்கு வந்து அரச மரத்தடியில் ஒய்வு எடுக்கும் போது குளிர்ச்சியாக இருந்தது. நமக்கே இவ்வளவு குளிர்ச்சியாக உள்ளதே, இங்கு சிவபெருமான் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார். எண்ணத்தை அறிந்த சிவபெருமான் சுயம்புவாக இங்கே எழுந்தருளினார். அரசமரத்தடியில் எழுந்தருளியதால் இந்த ஊருக்கு அரசிலி என்றும் இறைவனுக்கு அரசலீஸ்வரர் என்றும் பெயர் வந்தது. இந்த லிங்கம் பூமியில் மறைந்துவிட்டது. பல ஆண்டுகளுக்கு பிறகு சத்தியவிரதன் என்ற மன்னன் இந்த பகுதியை ஆண்டு வந்தான். சிவபக்தனான, பிள்ளை இல்லாத இந்த அரசன் நந்தவனத்தில் ஒரு சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜை செய்து வந்தார். நந்தவனத்தில் தினமும் ஒரு பணியாள் பூ பறித்து பூஜைக்கு கொடுப்பார். தொடர்ந்து பல நாள் நந்தவனத்தில் பூ இல்லாததை அறிந்த அரசன் யாரோ அதிகாலையில் பூ பறித்து விடுகிறார்கள் என்று நினைத்தான். மறுநாள் அதிகாலையில் படை வீரர்களுடன் சென்று கண்காணித்தபோது மான் ஒன்று பூக்களை தின்பதை கண்டு கோபம் அடைத்தான். மானை அரசன் துரத்த மான் அரச மர பொந்துக்குள் சென்று மறைந்துவிட்டது. மன்னன் மர பொந்துக்குள் அம்பு விட்டான் . அதிலிருந்து குருதி வெளிப்பட்டது. மான் மேல் அம்பு குத்தி குருதி வருகிறது என நினைத்து பொந்தில் பார்த்தபோது. அங்கு மான் இல்லமால், வாமதேவருக்காக காட்சி அளித்த சிவலிங்கத்தை கண்டு, அதன் மேலிருந்து குருதி வருவதை கண்டு பதைபதைத்து இறைவனிடம் மன்னிப்பு கோரினான். இறைவனும் மானாக வந்தது தான்தான் என்று கூறி அவனுக்கு அருள் புரிந்து புத்திர பாக்கியமும் அருளினார்.
இங்கு சிவபெருமான் 108 ருத்ராட்ச மணிகளான பந்தலின் கிழ் சிறிய மூர்த்தியாக காட்சி தருகிறார். சிவலிங்கத்தின் மீது அம்பு தைத்த காயம் இருக்கிறது. இதை மறைப்பதற்கும் சிவனுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் லிங்கத்தின் மேல் தலைபாகை அணிந்து பூஜை செய்கிறார்கள். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்திக்கு மேலே நடராஜர் இருப்பது காண கிடைக்காத ஒன்று.
தேவாரம்:
மிக்க காலனை வீட்டி மெய்கடக் காமனை விழித்து
புக்க வூரிடு பிச்சை உண்பது பொன் திகழ் கொன்றை
தக்க நூல் திகழ் மார்பில் தவள வெண்ணீறணீந்து ஆமை
அக்கின ஆரமும் பூண்ட அடிகளுக்கு இடம் அரசிலியே
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
திண்டிவனம் புதுச்சேரி சாலையில் திண்டிவனத்திலிருந்து 24 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
தங்கும் வசதி:
புதுச்சேரியில் தங்கி அங்கிருந்து செல்லலாம். புதுச்சேரியில் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 முதல் மாலை 7.00 வரை திறந்திருக்கும்.
கோயிலின் முகவரி:
அருள்மிகு பெரியநாயகி உடனுறை அரசிலிநாதர் ஆலயம், ஒழிந்தியாப்பட்டு அஞ்சல், வானூர் வழி, விழுப்புரம் மாவட்டம் 605109.
தொலைபேசி:
கணேச குருக்கள் – 04147 – 295376, 9994476960
குமார் குருக்கள் 04147 – 235472