கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் பெருமாள் வரதராஜர் என்ற திருநாமத்துடன் தன் பின் தலையில் சூரியனுடன் காட்சி தருகிறார். இத்தலம் ராமானுஜரின் குருவான திருக்கச்சிநம்பிகளின் அவதார தலமாகும். திருக்கச்சிநம்பிகள் திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணி முதலில் ஸ்ரீரங்கம் சென்றார். அவருக்கு காட்சி தந்த சுவாமி, தான் காவிரிக்கரையில் இருப்பதால் குளிர்ச்சியாக இருப்பதாகவும், எனவே விசிறத் தேவையில்லை என்றும் சொன்னார். பின் அவர் திருப்பதி சென்றார். வெங்கடேசர் அவரிடம் தான் மலை மீதிருப்பதால் தனக்கு குளிர் அதிகம் என்றார். அடுத்து அவர் காஞ்சிபுரம் வந்தார். காஞ்சி வரதராஜர், பிரம்மா நடத்திய யாக குண்டத்தில் இருந்து தோன்றியதால் உக்கிரமாக இருந்தார். அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக, திருக்கச்சிநம்பிகள் அவருக்கு விசிறி சேவை செய்தார். இச்சம்பவத்தை குறிக்கும் விதமாக இங்கு மூன்று பெருமாளுக்கும் தனித் தனி சந்நிதி உள்ளது. மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்ஸவம் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி தாயார் மல்லிகை மலரில் அவதரித்தவள். அதனால் புஷ்பவல்லி என்று அழைக்கப்படுகிறார். பூவிலிருந்து அவதரித்த தாயார் உள்ள ஊர் என்பதால் இவ்வூர் பூவிருந்தவல்லி என்றழைக்கப்பட்டு பின்னர் மருவி பூந்தமல்லி என்றானது.
பலன்கள்:
ஜாதகத்தில் சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்து இறைவனை வேண்டி பலனடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சென்னையிலுள்ள பூந்தமல்லியில் இத்தலம் உள்ளது. பேருந்து நிலையம் அருகிலேயே கோயில் உள்ளது. சென்னையின் அநேக இடங்களிலிருந்தும் பூந்தமல்லிக்கு மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் பூந்தமல்லி, சென்னை – 600056
தொலைபேசி:
044 – 2627 2066