கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் ஆதிமூலேஸ்வரர் என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் காஷ்யப மகரிஷி சிவனை வேண்டி யாகம் நடத்தியபோது, வருணன் மழையைப் பொழிவித்தான். இதனால் அவரிடம் சாபம் பெற்று தன் சக்தியை இழந்தான். இழந்த சக்தி மீண்டும் கிடைக்க, சிவனை வேண்டினான். வருணனுக்கு அருள்புரிந்த சிவன், அவனது வேண்டுதலுக்கிணங்க இத்தலத்தில் எழுந்தருளியுள்ளார். மேலும் சித்திரகுப்தர் சிவனருள் பெற்று, எமதர்மனின் கணக்கராக பணி பெற்ற தலம் இது. சித்திரகுப்தருக்கு அவரது 12 ஆவது வயதில் உயிர் பிரியும் விதி இருந்தது. இதை அறிந்த சித்திரகுப்தர் மனம் வருந்தி சிவனை வேண்டினார். இவருக்கு அருள்புரிந்த சிவன் இவரை யமனின் உதவியாளராக சேர்த்துக்கொள்ளுமாறு யமனுக்கு கட்டளையிட்டார். மேலும் சித்திரகுப்தர் என்றும் 12 வயது உடையவராக இருக்குமாறு அருள்புரிந்தார். இச்சம்பவத்தைக் குறிக்கும் விதமாக சித்திரகுப்தருக்கு இங்கு தனி சந்நிதி உள்ளது. சிவன் கோயில்களில் பைரவருக்கு அர்த்தஜாம பூஜை செய்து நடை அடைப்பது வழக்கம். இங்கு, பைரவருக்கும், சித்திரகுப்தருக்கும் பூஜை செய்து நடை அடைக்கப்படுகிறது. அர்த்த ஜாமத்தில் சித்திரகுப்தரே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை நடக்கும். இத்தலம் இமயமலையில் வாழும் மஹா அவதார புருஷர் பாபாஜியின் சொந்த ஊர் என்பதும் அவருக்கு இங்கு தனிக்கோயில் உள்ளது என்பதும் இத்தலத்தின் மேலுமொரு சிறப்பாகும்.
பலன்கள்:
வருணன் அருள் பெற்ற தலமென்பதால் குறைவின்றி மழை பெய்யவும், அதிக மழைப்பொழிவால் சேதம் உண்டாகாமல் இருக்கவும் இங்கு வேண்டிக் கொள்ளலாம் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் மிருத்யுஞ்சய ஹோமம் செய்து வழிபட்டால், மரண பயம் நீங்கி ஆயுள் விருத்தி பெரும் என்பதும் நோய்கள் தீரும் என்பதும் ஐதீகம். மேலும் இத்தலத்திலுள்ள சித்திரகுப்தரை வழிபட்டால் ஞானம் மற்றும் மோட்சம் கிட்டும் என்பதும் நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
சிதம்பரத்திலிருந்து 17 KM தொலைவில் இக்கோயில் உள்ளது. சென்னையிலிருந்து செல்வோர் கடலூர் சிதம்பரம் சாலையிலுள்ள புதுச்சத்திரம் சென்று அங்கிருந்து 8 KM தொலைவுள்ள பரங்கிப்பேட்டை செல்லலாம். கடலூரிலிருந்தும், சிதம்பரத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தங்கும் வசதி:
அருகிலுள்ள சிதம்பரத்திலோ அல்லது கடலூரிலோ தங்கி அங்கிருந்து செல்லலாம். கடலூரிலும் சிதம்பரத்திலும் ஏராளமான தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 7.00 மணி முதல் மதியம் 11.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில், பரங்கிப்பேட்டை, கடலூர் மாவட்டம் – 608502.