கோயிலின் சிறப்புகள்:
திருக்கடையூரில் அருள்புரியும் இந்த அமிர்த நாராயண பெருமாள் இல்லையென்றால் அந்த அபிராமி அன்னையே இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம் திருக்கடையூரில் அபிராமி அன்னை தோன்ற காரணமானவரே இந்த அமிர்த நாராயண பெருமாள்தான். தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தனர். அசுரர்களை ஏமாற்றி விஷ்ணு அதை ஒரு கலசத்தில் வைத்தார். மீண்டும் கலசத்தை திறந்த போது அமிர்தம் சிவலிங்கமாக இருந்தது. பார்வதி தேவியின் அருள் இல்லாததால்தான் இவ்வாறாக ஏற்பட்டதாக விஷ்ணு கருதினார். தனது மார்பில் அணிந்திருந்த திருவாபரணங்களை கழற்றி அதை பார்வதி தேவியாக நினைத்து பூஜித்தார். அப்போது அம்பாள் அபிராமி என்ற திருநாமத்தோடு அங்கு தோன்றி அமிர்தம் கிடைக்க அருள்பாலித்தாள். தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க அருள்பாலித்த பெருமாள் ஆதலால் அமிர்த நாராயண பெருமாள் என்ற திருநாமம் பெற்றார். ராகு கேது உருவான ஸ்தலமும் இதுவேயாகும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை தரிசித்துவிட்டு இந்த பெருமாளையும் தரிசித்தால்தான் முழு பலன் கிட்டும் என்பது ஐதீகம். இந்த பெருமாளை சாட்சியாக வைத்துதான் சிவன் காலனை வதம் செய்தார் என்பது இத்தலத்தின் மேலும் ஒரு சிறப்பாகும். இவ்வளவு சிறப்பு பெற்ற இப்பெருமாள் கோயில் தற்போது சிதிலமடைந்து வெறும் கீற்று கொட்டகையாக உள்ளது. இக்கோயில் திருப்பணிகள் நடந்து மீண்டும் பொலிவுடன் இந்த ஆலயம் எப்போது பிரகாசிக்கும் என்பது அந்த அமிர்த நாராயண பெருமாளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.
பலன்கள்:
திருமணம் ஆகாத பெண்கள் இக்கோயிலில் உள்ள அமிர்தவல்லி தாயாரிடம் வேண்டினால் சிறந்த மணமகன் அமைவார் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி செல்லும் சாலையில் 20Km தொலைவில் உள்ளது. அமிர்தகடேஸ்வரர் அபிராமியம்மன் கோயிலிலிருந்து இக்கோயிலுக்கு நடந்தே செல்லலாம். மயிலாடுதுறையிலிருந்து தரங்கம்பாடி, பொறையார் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். நகர பேருந்துகளும் உள்ளன.
தங்கும் வசதி:
திருக்கடையூரில் சதாபிஷேகம், கனகாபிஷேகம், மணிவிழா, போன்ற தங்கும் விடுதிகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரை
கோயில் முகவரி:
ஸ்ரீ அமிர்த நாராயண பெருமாள் ஆலயம்
திருக்கடையூர், நாகப்பட்டினம் மாவட்டம், பின் – 609311
தொலைபேசி:
9443986202