கோயிலின் சிறப்புகள்:
இத்தலத்தில் இறைவன் ரவீஸ்வரர் என்ற திருநாமத்தில் வீற்றிருந்து அருள்புரிகிறார். ஒரு சமயம் சூரியனின் மனைவியான சமுக்ஞா தேவி சூரியனது உக்கிரம் தாங்காமல் அவரிடமிருந்து பிரிந்து சென்றாள். சூரியன் பிரிந்து சென்ற தன் மனைவியை தேடிச் சென்றார். அப்போது அவ்வழியில் பிரம்மா யாகம் நடத்திக் கொண்டிருந்தார். சூரியன் அவரை கவனிக்காமல் சென்று விட்டார். இதனை சூரியன் தன்னை இழிவு படுத்தியதாக எண்ணிய பிரம்மா சூரியனை சபித்து விட்டார். சூரியனும் சாப விமோசனம் வேண்டி இத்தலத்தில் ஒரு லிங்கம் பிரதிஷ்டை செய்து வேண்டினார். சிவனும் சூரியன் முன் தோன்றி சாப விமோசனம் கொடுத்தருளினார். சூரியனுக்கு விமோசனம் கொடுத்தவர் என்பதால், அவரது பெயரிலேயே ரவீஸ்வரர் (ரவி என்பது சூரியனின் ஒரு பெயர்) என்றும் பெயர் பெற்றார். சிவனுக்கு எதிரேயுள்ள சுவரில், சிவலிங்கம் போன்ற அமைப்பில் துளை உள்ளது. தினமும் காலையில் சூரியனின் ஒளி, சிவலிங்க வடிவ துளையின் வழியாக சிவலிங்கத்தின் மேல் விழுகிறது. தினமும் சூரியனே சிவனுக்கு பூஜை செய்வதாக ஐதீகம். பதினென் புராணங்களையும், வேதங்களையும் இயற்றிய வேதவியாசர் வழிபட்ட தலம் இது. எனவே இத்தலம் அவரது பெயரால், “வியாசர்பாடி’ எனப்பெயர் பெற்றது. இவருக்கு சிவன் சன்னதிக்கு பின்புற பிரகாரத்தில் சிறிய சன்னதி இருக்கிறது. வியாசர் சன்னதிக்கு அருகில், முனைகாத்த பெருமாள் சன்னதி இருக்கிறது. வேதவியாசர் மகாபாரதக் கதையைச் சொன்னபோது, விநாயகர் தனது தந்தத்தை உடைத்து எழுதினார். அப்போது, தந்தத்தின் கூரிய முனை, மழுங்கி விடாமல் இந்த பெருமாள் காத்தருளினார். எனவே இவர் முனை காத்த பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். பெருமாளுக்கும் சந்நிதி இருப்பது தனிச்சிறப்பாகும்.
பலன்கள்:
இத்தலத்து சிவன், பெருமாள் மற்றும் வியாசர் ஆகியோரிடம் வேண்டினால் முறையே பாவ விமோசனம், அறிவாளியான குழந்தை மற்றும் கல்வி கலைகளில் சிறப்பு ஆகியவற்றை அடையலாம் என்பது நம்பிக்கை.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
வியாசர்பாடி மார்க்கெட் பேருந்து நிறுத்ததிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் உள்ளது இக்கோயில். வியாசர்பாடிக்கு சென்னையின் அனேக இடங்களிலிருந்தும் மாநகரப் பேருந்துகள் உள்ளன.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
கோயில் முகவரி:
அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோயில், வியாசர்பாடி, சென்னை – 600 039.
தொலைபேசி:
044 2551 8049, 99418 60986