இறைவன்: |
அமிர்தகடேஸ்வரர் |
இறைவி: |
வித்யஜோதிநாயகி |
தீர்த்தம்: |
ஆதி தீர்த்தம் |
பாடியோர்: |
அப்பர், சம்பந்தர் |
கோயிலின் சிறப்புகள்:
தேவார பாடல் பெற்ற காவேரி வடகரை ஆலயங்களில் 34 வது ஆலயம். பாற்கடலில் கிடைத்த அமுதத்தை விநாயகரை வணங்காமல் தேவர்கள் பருக சென்றதால் விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுதகலசத்தை எடுத்து செல்லும்போது ஒரு துளி அமுதம் கடம்பவனமாக இருந்த இந்த ஊரில் விழுந்தது. அந்த இடத்தில் சிவன் சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்திரனும் தேவர்களும் தங்கள் தவறை உணர்ந்து விநாயகரிடம் மன்னிப்பு கேட்டு அமுதகலசத்தை திரும்பி கேட்டனர். விநாயகர் சிவனிடம் வேண்டும்படி கூறினார். சிவன் இந்திரனுக்கு அமுதகலசத்தை கொடுத்து அமிர்தகடேஸ்வரர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார்.
தேவர்களின் தாயான அதிதி, அமுதம் அளித்த சிவனை தினமும் வணங்கி வந்தார். இவர் தினமும் இங்கு வருவதை விரும்பாத இந்திரன் இந்த சிவனை கோயிலோடு இந்திரலோகம் எடுத்து செல்ல விரும்பி கோயிலை தேர் வடிவில் மாற்றி இழுத்து செல்ல முயன்றான். விநாயகர் தன காலால் தேர் சக்கரத்தை மிதித்து கொள்ள இந்திரனால் ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.இந்திரன் விநாயகரிடம் வழி விடும்படி வேண்ட விநாயகர் இந்திரனிடம் கோடி லிங்ககளை பிரதிஷ்டை செய்தால் தேரை கொண்டு செல்லலாம் என்று கூறினார். இந்திரன் ஆணவத்துடன் லிங்கங்கள் செய்ய அனைத்தும் பின்னப்பட்டன, தவறை உணர்ந்த இந்திரன் அமிர்தகடேஸ்வரரை வேண்ட அவர் ஆயிரம் முறை தன் பெயரை சொல்லி ஒரு லிங்கம் செய்யும்படி பணித்தார். அதன்படி இந்திரன் ருத்ரகோடிஸ்வர லிங்கத்தை உருவாக்கினான். சிவன் அவனுக்கு காட்சி தந்து தான் இங்கேயே இருக்க விரும்புவதால் அதிதிக்கு பதில் இந்திரனே தினமும் வழி படலாம் என கூறினார். இந்திரனும் மன்னிப்பு கேட்டான் . தினமும் இந்திரன் பூஜை செய்வதாக ஐதிகம்.
நவக்கிரகங்கள் தங்களுக்கான நாட்களில் சிவனை வழிபடுவதாக ஐதிகம். சிவன் ஒவ்வொரு தினமும் அந்த அந்த நவக்ரகளுங்கு உரிய வஸ்திரத்துடன் அருள் பாலிக்கிறார். கிரகதோஷ பரிகார ஸ்தலம்.
சனீஸ்வர பகவானுக்கு இங்கு கழுகுதான் வாகனம், தசரதச்சக்ரவர்த்திதான் பின்பு கழுகுக்கு பதில் காகத்தை இங்குதான் வாகனமாக கொடுத்தார்.
சிவலிங்கம் நவபாஷணாத்தால் செய்ய பட்டது, சிவலிங்கத்தின் மேல் பங்குனி 3, 4 மற்றும் 5 தேதிகளில் சூரிய ஒளியும் ஐப்பசி அன்னாபிஷேகத்தின் போது இரவில் சந்திர ஒளியும் விழுவது சிறப்பு,
அம்பாள் காலையில் வீணை ஏந்தி சரஸ்வதியாகவும் (வித்யா) மதியம் யானையுடன் லக்ஷ்மியாகவும் (ஜோதி) இரவில் சூலத்துடன் துர்க்கையாகவும் (நாயகி) அருள் தருவதால் வித்யஜோதிநாயகி என்று அழைக்கிறார்கள். சோதிமின்னம்மை என்ற பெயரும் இவருக்கு உண்டு. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக அவசியம் வணங்க வேண்டிய ஸ்தலம்.
தேவாரம்:
நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன் தென் கடம்பைத் திருகரக்கோயிலான் தன் கடன்னடியேனையுந் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே.
இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:
இந்த தலம் சிதம்பரத்திலிருந்து 30 கி.மி. காட்டுமன்னர்குடியிலிருந்து 6 கி.மி தொலைவில் உள்ளது. பஸ் வசதியுண்டு.
கோயில் முகவரி:
அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலகடம்பூர் & அஞ்சல், ரெட்டியூர் வழி, காட்டுமன்னர்குடி வட்டம், கடலூர் மாவட்டம். 608304.
தொலைபேசி:
செல்வகணேசன் குருக்கள், 04144 – 264638, 93456 56982